டித்வா புயல் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைக்கும் பணிகளை எதிர்வரும் ஆண்டிலேயே பூர்த்தி செய்ய முடியும் என்று அரசாங்கம் அறிவித்தள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள நிதி மூலோபாய அறிக்கையில் மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை கா…

டித்வா புயல் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைக்கும் பணிகளை எதிர்வரும் ஆண்டிலேயே பூர்த்தி செய்ய முடியும் என்று அரசாங்கம் அறிவித்தள்ளது.

2027ஆம் ஆண்டுக்காக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள நிதி மூலோபாய அறிக்கையில் மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அழிவுகளை சீரமைக்கும் பணிகளை 2026ஆம் ஆண்டில் நிறைவு செய்ய முடியாது.

அதே சமயம், 2026ஆம் ஆண்டுக்காக 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், மீள் குடியேற்றத் திட்டத்தின் அளவு மற்றும் சிக்கல் தன்மை காரணமாக அந்த அனைத்துப் பணிகளையும் இந்த வருடத்திற்குள் நிறைவு செய்வது கடினம் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இழப்புக்களை சீர்ச் செய்வதற்கு அரசு திட்டம்

இந்த வருடத்திற்காக நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நிதி ஒதுக்கீட்டில் பயன்படுத்தப்படாத கையிருப்பு ஏதேனும் காணப்படும் பட்சத்தில், அதனை 2027ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்வதற்கு பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இல்லை என்றும் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள நிதி மூலோபாய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவு செய்வதற்கு எஞ்சியுள்ள புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளுக்கான நிதி அளவு, இந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தேவைகளின் ஒரு பகுதியை 2027ஆம் ஆண்டுக்கான முதன்மைச் செலவு வரம்பிற்குள் நிர்வகிக்க முடிந்த போதிலும், எஞ்சிய பணிகளை நிறைவு செய்வதற்கு மேலதிக வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தேவைப்படலாம் எனவும், அந்த நிதியின் அளவு மற்றும் அவை தேவைப்படும் காலம் என்பன இந்த தருணத்தில் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் நிதி மூலோபாய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை நிறைவு செய்வதற்கான செலவுகளுக்கு மட்டும், 2027ஆம் ஆண்டில் துணை மதிப்பீடொன்றின் மூலம் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.