பொசோன் பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் 10,000க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், துணை பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும…
பொசோன் பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் 10,000க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், துணை பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் நீரில் மூழ்கி 75 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆறுகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் நீராடும் போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.நாட்டிலுள்ள 48 போலீஸ் பிரிவுகளில் 31 பிரிவுகளில் உயிர் காக்கும் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்த நிலையில் நீர்நிலைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறும், ஆபத்து எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் உயிர் காக்கும் படையினரின் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். பொசோன் பண்டிகைக் காலத்தில் வீதிகளில் அதிக சத்தத்தை எழுப்பி, அமைதியற்ற முறையில் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப் பயன்படுத்தி அதிக சத்தம் எழுப்புபவர்கள் மற்றும் பிறருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தியுள்ள வாகனங்களைப் பொலிஸ் பொறுப்பில் எடுப்பதற்காக சிவில் உடையில் போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். மேலும், மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவது மற்றும் சட்டப்பூர்வமான எண்ணிக்கையிலான பயணிகளை மாத்திரம் ஏற்றிச் செல்வது கட்டாயமாகும் எனவும், இதனை மீறுபவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பொசோன் விடுமுறையைக் கழிப்பதற்காக வீடுகளை விட்டு வெளியேறும் பொதுமக்கள், தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்தும், குறிப்பாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியவர்களின் பாதுகாப்பு குறித்தும் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். முதியவர்களை வீடுகளில் தனியாக விட்டுச் செல்வதன் மூலம் அவர்கள் குற்றவாளிகளின் இலக்காக மாறும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் தங்களது பயணங்களின் போதும், வீடுகளிலிருந்து வெளியேறும் போதும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

