நெடுந்தீவில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால், அங்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி…

நெடுந்தீவில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால், அங்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், நெடுந்தீவு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2010ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் ஆர்.ஓ. (RO) தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்தத் திட்டத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 80,000 லீற்றருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நெடுந்தீவில் தற்போது 1,400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன், அரச திணைக்களங்கள், பாடசாலைகள், ஆலயங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, தற்போதைய திட்டத்தின் கொள்ளளவை அதிகரிப்பது அவசியமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், நெடுந்தீவு மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, 2010ஆம் ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதிகளவான மழைநீர் சேகரிப்பு தாங்கிகளும், 300 குடும்பங்களுக்கான மலசலக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.