நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று பிற்பகல் (05) இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே வெடித்த மோதலுக்கு, 'பூரு மூனா' என்றழைக்கப்படும் ஒரு பாதாள உலகக் கும்பல் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் தலைமை தாங்கியதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரிய…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று பிற்பகல் (05) இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே வெடித்த மோதலுக்கு, 'பூரு மூனா' என்றழைக்கப்படும் ஒரு பாதாள உலகக் கும்பல் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் தலைமை தாங்கியதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்று தொடர்பான தகவல் சிறைச்சாலை காவலர்களுக்கு தெரியவந்த சம்பவம் தொடர்பாக இந்த மோதல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.மோதல் தீவிரம்

இன்றைய மோதலில் இதுவரை இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலைக் கைதிகளின் மோதலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும், விசேட அதிரடிப்படையினரும் சிறை வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

மோதல் தீவிரமடைந்ததால், சிறையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் வன்முறையாக நடந்துகொண்ட கைதிகள், சிறையில் உள்ள விசேட கைதிகளின் தடுப்புக் கூண்டுகளின் பூட்டுக்களை உடைத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த விசேட கைதிகளைத் தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்றொரு கைதிகள் குழு, சிறையில் உள்ள மருந்தகத்திற்குள் புகுந்து, அங்கு இருந்த வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு போதையேறும் நோக்கில் செயல்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, கலவரத் தடுப்புப் பிரிவு, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் உள்ளிட்ட பல குழுக்கள் சிறைக்குள்ளும் அதன் சுற்றுப்புறங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.