நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைகள் ஏனைய சிறைச்சாலைகளிற்கும் பரவக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தி…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைகள் ஏனைய சிறைச்சாலைகளிற்கும் பரவக்கூடிய அபாயநிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலும், அடிப்படை வசதிகள் இல்லாமையுமே இந்த மோதல்களுக்கு முதன்மைக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியு்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் 600 முதல் 650 வரையான கைதிகளை மட்டுமே தடுத்து வைக்க முடியும். ஆனால், தற்போது அங்கு 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். கழிப்பறை வசதிகள் கூட 250 அல்லது 300 கைதிகளுக்கு ஒன்று என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் சில கைதிகள் கழிவறைகளுக்குள்ளேயே தூங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான மனிதாபிமானமற்ற சூழலால் கைதிகள் மட்டுமன்றி, சிறைச்சாலை அதிகாரிகளும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறைச்சாலையைக் கட்டுப்படுத்துவதற்குக் தேவையான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் தற்போது நான்கில் ஒரு பகுதியினரே பணியில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கைதிகளை வகைப்படுத்தாமல், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களையும் கொடூரமான குற்றவாளிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளதே இந்த மோதல்கள் தீவிரமடைவதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வன்முறைச் சம்பவத்தை போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான மோதலாகக் காட்டி, உண்மையானப் பிரச்சினையை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நந்திமால குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முன்னர் பிந்துனுவெவ, வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைகளில் நடந்த படுகொலைகளின் போதும், அரசாங்கம் பல்வேறு முத்திரைகளைக் குத்தி தனது பொறுப்பில் இருந்து நழுவியதை அவர் நினைவு படுத்தியுள்ளார். சிறைச்சாலைகளுக்குள் நிலவும் இந்த நெருக்கடி நிலைக்கு அரசாங்கம் முறையான தீர்வை வழங்காவிட்டால், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் உறவினர்களை ஒன்றிணைத்து வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் சுதேஷ் நந்திமால சில்வா, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.