நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோதல், "பூரு மூனா" பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ் என்ற போதைப்பொருள் க…

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோதல், "பூரு மூனா" பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் வழிநடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை வெளிப்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட விரோதமே இந்த வன்முறைக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.காயமடைந்த 28 கைதிகள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நீர்கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதன்போது சில கைதிகள் விசேட வார்டுகளின் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மேலும் ஒரு குழுவினர் சிறைச்சாலை மருந்தகத்தை உடைத்து அங்கிருந்த வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சிறைச்சாலையிலிருந்த பெண் கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மோதலில் ஈடுபட்ட தரப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக்கு வெளியே திரண்டிருந்த கைதிகளின் உறவினர்கள், அதிகாரிகள் போதுமான தகவல்களை வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பொலிஸார் தலையிட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதிகளின் நிலை குறித்து உறவினர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது கலகத் தடுப்புப் பிரிவினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சிறைச்சாலையின் உள்ளேயும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.