நீர்கொழும்பு சிறைச்சாலையில், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகச் செயற்பட்ட தரப்பினருக்கும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறப்படும் தரப்பினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்ற மோதலில், இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு…
நீர்கொழும்பு சிறைச்சாலையில், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகச் செயற்பட்ட தரப்பினருக்கும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறப்படும் தரப்பினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்ற மோதலில், இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெறுவதாகவும், தற்போது டுபாயில் தங்கியுள்ள ‘டூம்’ (Doom) மற்றும் ‘அடா’ (Ada) ஆகியோரின் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிறைச்சாலைக்குள் இக்கடத்தல்களை முன்னெடுப்பதாகவும் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
‘டூம்’ என்பவரின் தந்தை மற்றும் அவருக்கு ஆதரவான தரப்பினர் சிறைக்குள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக, மற்றொரு தரப்பினர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தகவல் வழங்கியதே இந்த மோதலுக்குக் காரணமாகும் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
‘அடா’ மற்றும் ‘டூம்’ ஆகிய இரு தரப்பினருக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதாகக் கூறப்படும் தரப்பினருக்கும் இடையே இந்த மோதல் வெடித்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் படுகாயமடைந்த இருவர், மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும்போது தடிகளையும் கூரிய ஆயுதங்களையும் பயன்படுத்தியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறைச்சாலை விசேட பிரிவினர் சிறைக்குள் நுழைந்ததுடன், பாதுகாப்பிற்காக நீர்கொழும்பு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். இதனிடையே, இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் தங்களின் உறவினர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல், கைதிகளின் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் சிறைச்சாலை வாயிலுக்கு முன்னால் பெரும் அதிர்ச்சியுடனும் கவலையுடனும் கூடி, அதிகாரிகளிடம் விளக்கம் கோரி நின்றனர். மேலும், சிறைச்சாலையின் சில பகுதிகள் கைதிகளின் கட்டுப்பாட்டிலேயே ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

