பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள பசிபிக் தீவுக்கூட்டமான நியூ கலிடோனியாவில், கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதலாவது மாகாணத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(28.6.2026) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ளது. உள்நாட்டுப் பழங்குடியினரான கனக்குகளுக்கும், பிரான்…

பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள பசிபிக் தீவுக்கூட்டமான நியூ கலிடோனியாவில், கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதலாவது மாகாணத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(28.6.2026) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ளது.

உள்நாட்டுப் பழங்குடியினரான கனக்குகளுக்கும், பிரான்ஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறை மோதல்கள் காரணமாக இத்தேர்தல் நீண்டகாலமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமானது.

தலைநகர் நோமியாவில் (Noumea) உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.மாகாணத் தேர்தல் அசம்பாவிதங்கள் ஏதுமின்றித் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக சுமார் 2,500 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் நியூசிலாந்தின் பொதுத்துறை ஊடகமான ஆர்என்இசட் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் மூன்று மாகாண சபைகளுக்காக மொத்தம் 76 கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுக்க சுமார் 1,92,000 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் 54 பேர், இந்தத் தீவுக்கூட்டத்தின் முதன்மை ஆளும் அமைப்பான காங்கிரஸில் இடம்பிடித்து உள்ளூர் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைப் பெறுவார்கள் என்பதால் இத்தேர்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.தன்னாட்சி உடன்படிக்கை பிரான்சிடம் இருந்து முழு சுதந்திரம் கோரும் முக்கியக் குழுக்கள், பிரான்ஸ் அரசாங்கம் முன்வைத்த தன்னாட்சி உடன்படிக்கையை அண்மையில் நிராகரித்திருந்தன. ஏற்கனவே 2018, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட மூன்று பொது வாக்கெடுப்புகளிலும் பிரான்சுடன் இணைந்திருக்கவே பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருந்த போதிலும், பழங்குடியினக் குழுக்கள் தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்து வருவதால், பிரான்சுடன் எதிர்காலத்தில் நடத்தப்படும் அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.