நியூசிலாந்தில் தகாத செயலில் ஈடுபட்ட இலங்கையர் ஓருவருக்கு பத்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த வயோதிப பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தாகவும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள…

நியூசிலாந்தில் தகாத செயலில் ஈடுபட்ட இலங்கையர் ஓருவருக்கு பத்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த வயோதிப பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தாகவும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இலங்கை பராமரிப்பு ஊழியர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிலுஷான் ஜயங்க சில்வா கிந்தோட்ட விதானகே என அடையாளம் காணப்பட்ட இந்த நபருக்கு, அண்மையில் கிறைஸ்ட்சேர்ச் மாவட்ட நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது. எனினும், அவரது விபரங்களை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடை திங்கட்கிழமை (06) நீக்கப்பட்டதை அடுத்து இந்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. ரேடியோ நியூசிலாந்து ஊடகத்தின்படி, தான் பணிபுரிந்த காப்பகத்தில் இருந்த இரு முதிய பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தமை மற்றும் இருமுறை சட்டவிரோத பாலியல் தொடர்புகளைக் கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். எனினும், அந்த முதியோர் காப்பகத்தின் பெயரை வெளியிடுவதற்கான தடை நிரந்தரமாக நீடிக்கிறது. தீர்ப்பளித்த நீதிபதி ஜேன் ஃபரிஷ், "பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது உடல் மற்றும் மன நிலை காரணமாக மிகவும் பலவீனமானவர்களாக இருந்தனர். அவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த ஒரு ஊழியர், இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் இழைத்திருப்பது கடுமையான குற்றமாகும்" எனக் கண்டனம் தெரிவித்தார். இந்த பாலியல் குற்றங்கள் தவிர, 11 வயது சிறுமி ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் இவர் ஒப்புக்கொண்டுள்ளார். காரில் சென்றுகொண்டிருந்த இந்த நபர், சாலையோரமாக இருந்த சிறுமிக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி, சிகரெட் மற்றும் வாகன சவாரி தருவதாகக் கூறி காரில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார். எனினும், அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பியோடி, காரின் பதிவு இலக்கத்தைக் குறித்துக்கொண்டு தனது தாயிடம் கூறியதை அடுத்து, பொலிஸார் இவரைக் கைது செய்திருந்தனர். குற்றவாளி தனது பாலியல் குற்றங்களை இன்னும் மறுத்து வருவதாகவும், அவர் எந்தவித வருத்தத்தையும் வெளிக்காட்டவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன், தனது சிறைத்தண்டனையின் மூன்றில் ஒரு பகுதியை அனுபவித்த பின்னர், அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்தக் காப்பகத்தில் இவரால் பாதிக்கப்பட்ட வேறு நபர்கள் யாரும் இல்லை என நம்புவதாகத் தெரிவித்துள்ள நியூசிலாந்து பொலிஸார், எனினும் இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் முன்வந்து தெரிவிக்கலாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.