ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி காமினேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருந்த ஈரான் நாட்டுத் தலைவர்களை "ஒரே குண்டு வீச்சில்" அமெரிக்காவால் அழிக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும், அவ்வாறு செய்தால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யா…

ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி காமினேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருந்த ஈரான் நாட்டுத் தலைவர்களை "ஒரே குண்டு வீச்சில்" அமெரிக்காவால் அழிக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இருப்பினும், அவ்வாறு செய்தால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்பதால், அந்த முயற்சியைத் தவிர்க்கப்போவதாகவும் அவர் கூறினார். இறுதிச் சடங்கில் ஈரானின் சிரேஷ்ட தலைவர்களும், பல நாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

"அவர்கள் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள். ஒரே குண்டு வீச்சில் அவர்களை ஒட்டுமொத்தமாகத் தீர்த்துக் கட்ட முடியும். ஆனால், நாங்கள் அதைச் செய்யப்போவதில்லை; ஏனெனில், அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தை நடத்த எவரும் இருக்கமாட்டார்கள்... அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ளக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்" என்று 'ஆக்சியோஸ்' (Axios) செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா நிறுவப்பட்டதன் 250-வது ஆண்டு தினமான ஜூலை 4 அன்று இந்த இறுதிச் சடங்குகள் தொடங்கின. ஜூலை 9-ஆம் திகதி மஷ்கத்தில் அலி காமினேயின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை, கோம் (Qom) உள்ளிட்ட பல நகரங்களில் சடங்குகள் நடைபெறவுள்ளன. ஈரானின் பல பகுதிகளில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளதால், இந்த நிகழ்வு உலகளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹம்மது பாகர் காலிபாப் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ஜி உள்ளிட்டோர் உணர்ச்சிகரமாகக் காணப்பட்ட காட்சிகள் குறித்தும் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்தார். காமினேயை பல ஈரானியர்களுக்குப் பிடிக்காது என்று தான் நம்புவதாகக் கூறிய ட்ரம்ப், பொதுமக்களின் துக்கம் உண்மையானதா என்று கேள்வி எழுப்பியதுடன், அவர்கள் சிந்தும் கண்ணீர் "போலியானது" என்றும் கூறினார்.

மேலும், இறுதிச் சடங்கிற்காக இரு தரப்பும் ஒரு வார காலத்திற்குப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், காமினேயின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் வரை எந்தத் தரப்பும் தாக்குதல் நடத்தாது என்றும் குறிப்பிட்டார்.

36 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்திய அலி காமினி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஒரு பிராந்திய மோதலுக்கு வழிவகுத்தது. போர்க்கால சூழல் நிலவுவதால், 24 மணி நேரத்திற்குள் இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும் என்ற இஸ்லாமிய பாரம்பரியம் இருந்தும், ஈரானிய அதிகாரிகள் அவரது அடக்கச் சடங்கைப் பிற்போட நேரிட்டது.

இதற்கிடையில், இந்தியாவில் உள்ள மொஜ்தபா காமினேயின் பிரதிநிதி அயதுல்லா ஹக்கீம் எலாஹியை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள அறிக்கைகளின்படி, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் இலக்காகத் தாங்கள் மாறக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, காமினேயின் மகன் மொஜ்தபா இறுதிச் சடங்கில் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

இறுதிச் சடங்கில் ஏற்படக்கூடிய பெருமளவிலான உயிரிழப்புகளை எதிர்கொள்ள ஈரான் தயார்

ஜெர்மனியின் 'வெல்ட்' (WELT) செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மறைந்த தலைவரின் இறுதிச் சடங்கின் போது 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்று கருதி, ஈரானிய அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர். தெஹ்ரானைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஊடகவியலாளர் ஒருவர் எழுதியுள்ள அந்த அறிக்கையில், இறுதிச் சடங்கின் போது ஏற்படக்கூடிய பாரிய அனர்த்தங்களை எதிர்கொள்ள அதிகாரிகள் அவசரகாலத் திட்டங்களை வகுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.