பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் நடத்திய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 29 ஆயுதமேந்திய போராளிகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் ப…
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் நடத்திய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 29 ஆயுதமேந்திய போராளிகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகப் பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தாரர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்தியா, பக்திகா மற்றும் குனார் ஆகிய மூன்று மாகாணங்களில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் பதுங்குவிடங்களை இலக்கு வைத்து இந்தத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், பாகிஸ்தானின் இந்த வான்வழித் தாக்குதல்களில் வீடுகள் சேதமடைந்ததுடன், குறைந்தது 36 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 163 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்களது வான்வெளியை மீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதுவரை நேரில் அழைத்துத் தனது அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையைக் கொடுத்துள்ளது.
இதேபோல், பாகிஸ்தானும் தங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணே பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அந்நாட்டுத் தூதுவரை அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.தீவிரப்படுத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் உள்ள இராணுவப் படைத் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தலிபான் அமைப்பில் இருந்து பிரிந்த 'ஜமாத்-உல்-அஹ்ரார்' என்ற குழு பொறுப்பேற்றுள்ளது.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு ஆப்கானியப் பிரஜை காயங்களுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் எல்லையில் இந்த இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
எல்லையோரப் பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியான பழிவாங்கும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
தற்போதைய பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை ஏற்படுத்த சீனா, துருக்கி, சவூதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தீவிர சர்வதேச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

