பிரான்சில் 11 வயது சிறுமி லியானா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான "விரிவான சட்டக் கட்டமைப்பை" உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டம் தடுப்பு நடவடிக்கைகள், நீதித்துறை விசாரணை மற்றும…

பிரான்சில் 11 வயது சிறுமி லியானா  பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான "விரிவான சட்டக் கட்டமைப்பை" உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டம் தடுப்பு நடவடிக்கைகள், நீதித்துறை விசாரணை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். லியானா என்ற அந்தச் சிறுமி, கடந்த மே 29 அன்று தென்மேற்கு நகரமான புளோரன்சில் காணாமல் போனார். சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, கைவிடப்பட்ட தானியக் களஞ்சியம் ஒன்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான 41 வயது நபர், லியானாவின் பள்ளித் தோழியின் தந்தை என்பதும், அவர் ஏற்கனவே இருமுறை சிறுமியை வன்புணர்வு செய்ததாக முறைப்படி குற்றம் சாட்டப்பட்டிருந்தும், அந்த விசாரணைகள் கைவிடப்பட்டிருந்தன அல்லது முடங்கிப் போயிருந்தன என்பதும் தெரியவந்ததையடுத்து மக்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்துள்ளது.

இந்தத் துயரம், லியானாவையும் பல பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாத்திருக்க வேண்டிய ஒரு அமைப்பின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. பெண்ணிய மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், பாலியல் வன்முறையை ஒரு "முறையான பிரச்சினையாக" அங்கீகரிக்க வேண்டுமென்றும், "அடுத்தடுத்து வரும் வழக்குகளின் அவசரத்தால் மட்டும் உருவாக்கப்படும் துண்டுதுண்டான சட்டங்களுக்குப் பதிலாக, விரிவான ஒரு சட்டம்" தேவை என்றும் கோருகின்றன.

பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாகப் பேசிய மகளிர் அறக்கட்டளையின் தலைவர் ஆன்-செசில் மெயில்பெர்ட், "பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக வன்முறையாளர்களைப் பாதுகாக்கும் இந்த நிதி வசதியற்ற நீதித்துறையை வைத்துக்கொண்டு நாங்கள் திருப்தியடைய முடியாது. 94% வன்புணர்வு புகார்கள் தள்ளுபடி செய்யப்படும் சூழலில், நீதித்துறைக்குத் தெரிந்த பல குற்றவாளிகள் தண்டனை பெறாமல் உள்ளனர்" என்று ஆவேசமாக முழங்கினார்.

கடந்த மாதம், பிரான்சின் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறித்து தான் அஞ்சுவதாகக் கூறிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், "தெளிவான குறைபாடுகள் உள்ளன. தனிநபர்களின் பொறுப்பு என்ன என்பதையும், சம்பந்தப்பட்ட அனைத்து பொதுச் சேவைகளிலும் உள்ள முறையான குளறுபடிகள் எவை என்பதையும் நாம் இப்போது புரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

லியானா வழக்கின் "மிகப்பெரிய தோல்விக்காக" நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், ஜூலை 14-ஆம் திகதிக்குள் நிலுவையில் உள்ள சுமார் 70,000 குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை மீளாய்வு செய்யுமாறு அவர் வழக்குரைஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 8 அன்று தனது திட்டத்தை அறிவித்த டார்மானின், "ஒவ்வொரு தலைமை வழக்குரைஞரையும் சந்தித்து நிலைமையை ஆய்வு செய்யும் வரை, எந்தவொரு உயர் நீதிபதியும் விடுமுறைக்குச் செல்ல மாட்டார்; நானும் செல்ல மாட்டேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார். இருப்பினும், ஐரோப்பாவிலேயே மிகக் குறைவான தொழில்முறை நீதிபதிகளைக் கொண்ட, மந்தமாகச் செயல்படும் பிரான்சின் நீதித்துறையின் பின்னணியில், இந்த லட்சியத் திட்டம் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

லியானா வழக்கால் ஏற்பட்ட உணர்ச்சிகளைப் பயன்படுத்தி, தடுப்பு முறை முதல் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு வரை "360 டிகிரி" கொண்ட சட்டத்தை நிறைவேற்ற போராட்ட அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இக்கோரிக்கையை அவர்கள் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் இருந்தே வலியுறுத்தி வருகின்றனர். ஏஜென், டிஜோன் மற்றும் துலூஸ் உட்பட சுமார் 80 நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.