ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்திற்கு, மற்றொரு நபரின் தனிப்பட்ட விபரங்களைச் சேர்த்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை, உரிய பரிசோதனையின்றி ஏற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்ப…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்திற்கு, மற்றொரு நபரின் தனிப்பட்ட விபரங்களைச் சேர்த்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை, உரிய பரிசோதனையின்றி ஏற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) கயநாத் பிரசங்க என்பவரை, கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் கைது செய்துள்ளது.

போலி கடவுச்சீட்டு தயாரித்தமை தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குத் தொடர்பாக, நீதவான் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட, ‘கேஹெல்வத்தே தினுக’ என அழைக்கப்படும் ஹேவா பேதிகே தினுக சதுரங்க எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் புகைப்படத்திற்கு, வேறொரு நபரின் விபரங்கள் இணைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை, எவ்வித உரிய பரிசோதனையுமின்றி ஏற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கியதன் மூலம், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45(2)(1) வது பிரிவின் கீழ் உதவிய மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 51 வயதுடைய சந்தேகநபர், மாத்தறை, மடிஹ, கனத்தகோட வீதியைச் சேர்ந்தவர் ஆவார்.