வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்திற்கு அமைய, சாதாரண சேவைப் பேருந்துக் கட்டணங்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா புதன்கிழமை (01) பிற்பகல் தெரிவித்தார். அதற்கமைய, 100 கிலோமீட்டருக்கும் கு…

வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்திற்கு அமைய, சாதாரண சேவைப் பேருந்துக் கட்டணங்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா புதன்கிழமை (01) பிற்பகல் தெரிவித்தார்.

அதற்கமைய, 100 கிலோமீட்டருக்கும் குறைவான குறுகிய தூர சேவைப் பேருந்துகளுக்கு 12 சதவீதமும், 100 கிலோமீட்டருக்கு மேற்பட்ட நீண்ட தூர சேவைப் பேருந்துகளுக்கு 20 சதவீதமும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்சப் பேருந்துக் கட்டணம் 34 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் திருத்தம் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மிராண்டா குறிப்பிட்டார்.

இம்முறை பேருந்துக் கட்டணத் திருத்தமானது சாதாரண சேவை மற்றும் குளிர்சாதன (AC) வசதி கொண்ட பேருந்துகள் என இரு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 100 கிலோமீட்டருக்கும் குறைவான குறுகிய தூர குளிர்சாதனப் பேருந்துகளுக்கு 12 சதவீதமும், 100 கிலோமீட்டருக்கு மேற்பட்ட நீண்ட தூர குளிர்சாதனப் பேருந்துகளுக்கு 15 சதவீதமும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டண உயர்விற்கு புதன்கிழமை (30) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பேருந்து சங்கப் பிரதிநிதிகளுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் புதன்கிழமை (01) பிற்பகல் நடைபெற்றது.