செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக நீடித்து வரும் தொடர் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து, அந்நாட்டு ஜனாதிபதி அஅலெக்சாண்டர் வுசிக் இன்னும் சில வாரங்களில் தனது பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், நாட்டில் முன்கூட்டியே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள…

செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக நீடித்து வரும் தொடர் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து, அந்நாட்டு ஜனாதிபதி அஅலெக்சாண்டர் வுசிக் இன்னும் சில வாரங்களில் தனது பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், நாட்டில் முன்கூட்டியே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆதரவாளர் பேரணியில் உரையாற்றிய வுசிக், "நான் இன்னும் சில வாரங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருப்பேன், அதன் பின்னர் எனது பதவியை இராஜினாமா செய்வேன்" என பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் செர்பிய அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள வுசிக்கின் இரண்டாவது மற்றும் இறுதிப் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை உள்ள நிலையில், இந்த திடீர் தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார். கடந்த 2024 நவம்பரில் செர்பியாவின் நோவி சாட் நகரில் உள்ள புகையிரத நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, ஆளும் அரசின் ஊழல் மற்றும் உட்கட்டமைப்பு நிர்வாகச் சீர்கேடே இதற்கு காரணம் என கூறி மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த 18 மாதங்களாகத் தொடரும் இந்த ஊழல் எதிர்ப்புப் பேரணிகள், செர்பிய வரலாற்றில் 2000 ஆம் ஆண்டு ஸ்லோபோடன் மிலோசெவிக் வீழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் போராட்டமாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினாலும், அலெக்சாண்டர் வுசிக் செர்பிய அரசியலில் இருந்து முற்றிலும் விலக வாய்ப்பில்லை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அவரது 'செர்பிய முற்போக்கு கட்சி' வெற்றி பெற்றால், வுசிக் மீண்டும் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்கக் கூடும். செர்பியாவில் ஜனாதிபதி பதவி என்பது பெரும்பாலும் பெயரளவில் மட்டுமே அதிகாரம் கொண்டது என்பதால், வுசிக் மீண்டும் பிரதமர் பதவிக்குத் திரும்புவதே அவரது பலத்தை அதிகரிக்கும். வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள தனது ஆளும் கட்சிப் பட்டியலுக்கு "ஐக்கிய செர்பியா" என பெயரிட அவர் முன்மொழிந்துள்ளார். "மாணவர் அமைப்புகள் மற்றும் மக்கள் போராட்டங்களின் எழுச்சியால் ஏற்படவிருந்த தனது வீழ்ச்சியை முன்கூட்டியே தடுத்து, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே வுசிக் இந்த தேர்தல் நாடகத்தை ஆடுகிறார்" என மாணவர் இயக்கத் தலைவர் சாவோ மனோஜ்லோவிக் குற்றம் சாட்டியுள்ளார்.