அநுர தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அரசியலும் பரபரப்பாக இருக்கின்றது.குறிப்பாக தென்னிலங்கையில் ஊழல் மோசடி வழக்குகள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தி பேசு பொருளாக மாறியுள்ளது.வடக்கில் செம்மணி மனித புதைகுழி விவகாரம், கிளிநொச்சியைச் சேர்ந்த…
அநுர தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அரசியலும் பரபரப்பாக இருக்கின்றது.குறிப்பாக தென்னிலங்கையில் ஊழல் மோசடி வழக்குகள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தி பேசு பொருளாக மாறியுள்ளது.வடக்கில் செம்மணி மனித புதைகுழி விவகாரம், கிளிநொச்சியைச் சேர்ந்த மெல்லிசை பாடகர் சங்கீத்சன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்த விடுதலை செய்த விவகாரம் என்பன பேசுபொருளாக மாறியிருக்கின்றது.பயங்கரவாத தடைச்சட்டம் தென்னிலங்கையில் இடம்பெறும் விடயங்கள் ஒட்டுமொத்த மக்களினதும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், வடக்கு விவகாரங்கள் தமிழ் மக்களது எதிர்ப்புக்களையும், அவர்கள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டினதும், மக்களினதும் நலன் கருதியே சட்டங்கள் கொண்டு வரப்படுவது வழமை. ஆனால் இந்த நாட்டில் கொண்டு வரப்பட்ட சட்டங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது உலக மனித உரிமைகள் பிரகடனத்தை உதாசீனம் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒரு கொடூரமான சட்டமாகும். 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டு, 1979 இல் தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்டது.பின்னர் 1982 இல் இது நிரந்தர சட்டமாக்கப்பட்டது. பிடியாணையின்றி ஒருவரைக் கைது செய்யவும், நீண்டகாலம் தடுத்து வைக்கவும், பொலிஸாருக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் ஒரு சர்ச்சைக்குரிய சட்டமாக இது இருந்து வருகின்றது.
இந்தச் சட்டத்தின் கீழ் பலர் முறையான குற்றச்சாட்டுகள் அல்லது நீதிமன்ற விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அமைதியான எதிர்ப்புரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் இச்சட்டத்தின் மூலம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. சொல்லிசைப் பாடகர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பல சர்வதேச, உள்ளூர் சிவில் சமூக அமைப்புகள் நீண்டகாலமாக இச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தியும் வருகின்றன.
இந்தச் சட்டத்தின் மூலம் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், யுத்தத்திற்கு பின்னரும் இந்த நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. பல தமிழ், இளைஞர் யுவதிகள் கைது செய்யபடுவதற்கும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு அரசியல் கைதிகளாக இருப்பதற்கும், பலர் காணாமல் போனமைக்கும் இந்த சட்டமும் ஒரு காரணம் என்பதை மறுத்து விட முடியாது.இதன் காரணமாக தமிழ் மக்கள் நீண்டகாலமகவே இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என போராட்டங்களையும் நடத்தி வந்தனர். ஆனால், அது ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படவில்லை. தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் போதும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிங்கள மக்களும் தற்போது இந்த சட்டத்தை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனும் தனது கலைத்துறை செயற்பாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த பாடல்களை பயன்படுத்தியதாக அவர் மீது புலிகள மீள் உருவாக்கம் செய்யும் வகையில் அச் செயற்பாடு அமைந்துள்ளதாக தெரிவித்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்த்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையில் தமிழ் மக்கள் மீண்டும் போராடும் மனநிலையில் இல்லை.அவர்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதிலும், நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைப் பெற்று இந்த நாட்டில் சிங்கள மக்களுடன் சமத்துவமான ஒரு தேசிய இனமாக வாழவுமே விரும்புகிறார்கள். அதற்காக ஜனநாயக உரிமையை பயன்படுத்தி சில போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.ஜனாதிபதி உறுதி ஆனால், ஒரு கலைஞன் அவனது துறை சார்ந்த ஆர்வத்தையும், படைப்பையும் பயங்கரவாதமாக சித்தரித்து அச்சட்டத்தின் மூலம் கைது செய்தமை தமிழ் மக்கள் மத்தில் அரசாங்கத்தின் மீதும் பொலிசார் மீதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருந்தது. கடந்த கால அரசாங்களைப் போன்றே தமிழ் மக்களின் வாக்குளை பெற்று ஆட்சிக்கு வந்த அனுர அரசாங்கமும் நடந்து கொள்ள முயற்சிக்கின்றதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மனதில் எழுந்திருந்தது.
கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்ய வலியுறுத்தி வடக்கு - கிழக்கு பகுதிகளிலும், கொழும்பிலும், லண்டன் உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களிலும் போராட்டங்களும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தென்னிலங்கையில் இடம்பெற்று வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை காரணமாக பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல்வாதிகள், தென்னிலங்கை கட்சிகள் பலவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்க்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த நாட்டினது அழுத்தத்தை தடுக்கும் வகையில் சொல்லிசைப் பாடகர் மீது பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு அவர் ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உண்மையில் ஈழத்திலும், புலத்திலும் இடம்பெற்ற மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே இது.
ஜனாதிபதியும் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை இவ் வருடத்திற்குள் நீக்குவாதாக தெரிவித்துள்ளார். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். மக்களையும், எதிர்கட்சிகளையும் ஆசுவாசப்படுத்துவதற்காக இத்தகைய வாக்குறுதிகளை வழங்காமல் உண்மையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனநிலைகளை புரிந்து இத்தகைய அடக்கு முறைகளை கடந்த காலங்களை போன்று மேற்கொள்வதை நிறுத்த இந்த அரசாங்கம் முன்வர வேண்டும். அதன் மூலமே இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடாத வகையில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டு நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழ் நிலை உருவாகும். இதனை அரசாங்கமும் அதன் கீழ் இயங்கும் அரச இயங்திரங்களும் புரிந்து செயற்பட வேண்டும்.

