வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும் என்று திகாரிகளுக்கு தமிழக மு…
வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும் என்று திகாரிகளுக்கு தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு நேற்று (29) முதல்வர் விஜய் தலைமையில் இடம்பெற்றது. அதில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்ப்படுகளை செய்தே ஆக வேண்டும்.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சி.சி.டி.வி. நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 'கவரேஜ்' இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் சி.சி.டி.வி. நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, சி.சி.டி.வி. 'கவரேஜ்' ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித் துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.
கள்ளச் சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். (a)

