(நா.தனுஜா) பெண்களுக்கு எதிராக அனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உபகுழுவின் உறுப்பினராக இலங்கை சார்பில் பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் தெரிவானார். பெண்களுக்கு எதிராக அனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயத்தை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகளின் 24 ஆவது கூ…
(நா.தனுஜா) பெண்களுக்கு எதிராக அனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உபகுழுவின் உறுப்பினராக இலங்கை சார்பில் பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் தெரிவானார். பெண்களுக்கு எதிராக அனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயத்தை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகளின் 24 ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை (26) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக அனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உபகுழுவுக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடாத்தப்பட்ட தேர்தலில் இலங்கையின் பிரதிநிதியான பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் வெற்றிபெற்று, அக்குழுவின் 2027 - 2030 வரையான இரண்டாவது பதவிக்காலத்துக்குத் தெரிவானார். அதன்படி சமவாயத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள், தேர்தலில் பங்கேற்ற 20 வேட்பாளர்களில் 12 பிரதிநிதிகளை உபகுழுவில் அங்கம் வகிப்பதற்காகத் தேர்ந்தெடுத்தன. இத்தேர்தலில் இலங்கையின் சார்பில் பங்கேற்ற பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் வெற்றி பெற்றதுடன், அண்டிகுவா, பார்புடா, அஸர்பைஜான், கனடா, கியூபா, எகிப்து, எஸ்டோனியா, மெக்ஸிகோ, மொங்கோலியா, நைஜீரியா, ஸ்பெயின் மற்றும் உகண்டா ஆகிய நாடுகளின் உறுப்பினர்களும் மேற்படி உபகுழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உபகுழுவின் இரண்டாவது பதவிக்காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது இலங்கை பிரதிநிதியாவார். பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயத்தை இலங்கை 1981 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டு, அதில் ஒரு உறுப்புநாடாக இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

