சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றில், நெதர்லாந்து அணியின் சவாலை பெனால்டியில் 3-2 (1-1) என்ற கணக்கில் முறியடித்து மொராக்கோ த்ரில் வெற்றி பெற்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மெக்ஸிக்கோவில் செவ்வாய்க்கிழமை (…
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றில், நெதர்லாந்து அணியின் சவாலை பெனால்டியில் 3-2 (1-1) என்ற கணக்கில் முறியடித்து மொராக்கோ த்ரில் வெற்றி பெற்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மெக்ஸிக்கோவில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியின் 72ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் வெளட் வெஹோஸ்ட்டின் பங்களிப்போடு நெதர்லாந்தின் கோடி கக்போ முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை தந்தார். அண்மையில் தனது பிறக்காத குழந்தையை இழந்த சோகத்தில் இருந்த கக்போ, இந்த உருக்கமான கோலை அடித்ததும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.
நெதர்லாந்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் கூடுதல் நேரத்தில் மொராக்கோவின் ஷெம்ஸ்டீன் தல்பி கொடுத்த துல்லியமான பந்துப் பரிமாற்றத்தை, இசா தியொப் தலையால் முட்டி கோலாக மாற்றி 1-1 என ஆட்டத்தைச் சமன்செய்து அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் 120 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி முறை பயன்படுத்தப்பட்டது.
பெனால்டி த்ரில்லர்: பெனால்டியில் நெதர்லாந்தின் கிஸென்ஸியோ சம்மர்வில் அடித்த பந்தை மொராக்கோ கோல் காப்பாளர் யசின் போனோ அபாரமாகத் தடுத்தார். மொராக்கோவின் அஷ்ரஃப் ஹக்கீமி பந்தை கோல் கம்பத்தில் அடித்து வாய்ப்பைத் தவறவிட்டாலும், இறுதியாகக் கிடைத்த தீர்க்கமான வாய்ப்பில் இஸ்மயில் சைபரி பதற்றமின்றி கோல் அடித்து மொராக்கோவின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் மொராக்கோ இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் உலகக் கிண்ணத்தை நடத்தும் இணை நாடான கனடாவை எதிர்கொள்ளவுள்ளது.

