(நெவில் அன்தனி) சவூதி அரேபியாவுக்கு எதிராக ஹூஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஜீ குழு பிபா உலகக் கிண்ணப் போட்டியை கோல் எதுவும் இல்லாமல் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டதன் மூலம் கேப் வேர்டே முழு கால்பந்தாட்ட உலகத்தையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அரியதோர் வ…

(நெவில் அன்தனி) சவூதி அரேபியாவுக்கு எதிராக ஹூஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஜீ குழு பிபா உலகக் கிண்ணப் போட்டியை கோல் எதுவும் இல்லாமல் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டதன் மூலம் கேப் வேர்டே முழு கால்பந்தாட்ட உலகத்தையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அரியதோர் வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

இக் குழுவில் தொடர்ச்சியான மூன்றாவது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டதன் மூலம் கேப் வேர்டே, உலகக் கிண்ண  நொக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதலாவது மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டது. ஆபிரிக்காவின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள இந்த சிறிய தீவு, இந்த பிரம்மாண்டமான உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரங்கில் கால்பதித்தது இதுவே முதல் தடவையாகும்.

முன்னாள் சம்பியன்களை அசத்திய கேப் வேர்டே தனது குழுவில் இடம்பெற்ற இரண்டு முன்னாள் சம்பியன்களுடனான போட்டிகளையும் கேப் வெர்ட்டே வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு முழு கால்பந்தாட்ட உலகையும் தன்பால் ஈர்த்திருந்தது. தென் ஆபிரிக்காவில் 2010இல் உலக சம்பியனான ஸ்பெய்ன் (0 - 0), 1930 அங்கரார்ப்பண உலகக் கிண்ணத்தில் சம்பியனான உருகுவே (2 - 2) ஆகிய பிரபல அணிகளுடனான போட்டிளை கேப் வேர்டே வெற்றிதோல்வியின்றி முடித்திருந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றொரு போட்டியில் உருகுவேயை 1 - 0 என வெற்றிகொண்டதன் மூலம் ஸ்பெய்ன் 7 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்றது. கேப் வேர்டே 3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்று ஸ்பெய்னுடன் இக் குழுவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இக் குழுவில் 2 வெற்றி தோல்வியற்ற முடிவுகள், ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 2 புள்ளிகளை மாத்திரம் பெற்ற உருகுவே முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது.

இதனை அடுத்து மியாமியில் ஜூலை 3ஆம் திகதி நடைபெறவுள்ள 32 அணிகள் சுற்றில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவை கேப் வெர்டே எதிர்த்தாடவுள்ளது. லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீனாவுக்கும் கேப் வேர்டே சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் வரலாறு பீபா உலகக் கிண்ணப் போட்டி, இயூரோ கிண்ணம் போன்ற பிரதான போட்டிகளில் குழு நிலையில் 3 போட்டிகளையும் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொள்ளும் போது அடுத்த சுற்றுக்கான தகுதியைப் பெறுவதற்கு உத்தரவாதம் மிக அரிதகாவே இருக்கும். கடந்த கால உலகக் கிண்ணப் போட்டிகளின்போது இத்தகைய நிலைமைகள் இடம்பெற்றுள்ளதை இங்கு மீட்டுப்பார்ப்பது பொறுத்தமாக இருக்கும். வேல்ஸ் (1958), அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து (1990), சிலி (1998) ஆகிய அணிகள்இவ்வாறு அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தன.  ஆனால், 2010 உலகக் கிண்ணத்தில் நியூஸிலாந்து மூன்று போட்டிகளைச் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்ட போதிலும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தது. இந்த முக்கியமான போட்டிக்கு முந்தைய நாளன்று, கேப் வெர்டே அணியின் பயிற்றுநர் புபிஸ்டா, 'ஒவ்வொருவருக்கும் கனவு காண்பதற்கு உரிமை உண்டு, உலகில் எதுவும் முடியாதது அல்ல' என தனது வீரர்களிடம் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். ஐந்து லட்சத்திற்கும் சற்று அதிகமான சனத் தொகையைக் கொண்ட இந்தச் சிறிய தீவு, 32 அணிகள் நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் தங்கள் மீதிருந்த அத்தனை சந்தேகங்களையும் தகர்த்து, பயிற்றுநரின் வார்த்தைகளை 'நீல சுறாக்கள் '(The Blue Sharks) என அழைக்கப்படும் இந்த அணியினர் உண்மையாக்கிக் காட்டியுள்ளனர். மைதானத்தில் தன் முகத்தில் தீவின் தேசியக் கொடியை வரைந்திருந்த பெண் ஒருவர், 'சிறிய தீவுகள், பெரிய கனவுகள்' என்ற வாசகம் எழுதிய பதாகையை ஏந்தியவாற சக நண்பிகளுடன் அணியை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். உலக கால்பந்தாட்ட அரங்கில் தங்களின் பயணத்தைத் தொடரும் இந்த எளிய (Undergdogs) அணியினர் அந்தக் கனவை தற்போது நனவாக்கியுள்ளனர்.

கோல்காப்பாளர் வோஸின்ஹாவின் அசாத்திய திறமை கேப் வேர்டே அணியின் 40 வயதுடைய அனுபவமிக்க கோல்காப்பாளர் வோஸின்ஹாவின் அசாத்திய திறமை மூலமே அவர்களால் சாதிக்க முடிந்தது. இந்தத் தொடரில் அவர் காட்டிய அசாத்திய திறமையால், இன்ஸ்டகிராமில் அவரது பின்தொடர்வோரின் எண்ணிக்கை 16 மில்லியனை தாண்டியுள்ளது.

ஆட்டத்தின் முதாவது பகுதியின் உபாதையீடு நேரத்தில், சவுதி அரேபியாவின் மொஹமத் கனோ தனது தலையால் கோலை நோக்கி முட்டிய பந்தை வோஸின்ஹா லாவகமாகப் பிடித்து சவுதி அணியினருக்கு கோல் கணக்கைத் தொடங்கவிடாமல் தடுத்தார். பின்னர் 66ஆவது நிமிடத்தில், மொஹமத் அபு அல்-ஷாமத் அடித்த பந்தையும்  வோஸின்ஹா  ஒரு புறமாகத் தாவி தடுத்து நிறுத்தினார். முழு போட்டியின் உபாதையீடு நேரத்தில் அப்துல்லா அல்-ஹம்தான் அடித்த கோல் வாய்ப்பையும்  வோஸின்ஹா  முறியடித்தார். மைதானத்தில் மேலாடையின்றி அமர்ந்திருந்த ரசிகர்கள் சிலர், தங்களின் நெஞ்சில் அவரது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் வரைந்து கொண்டு கேப் வெர்டே அணியை உற்சாகப்படுத்தினர். ஹூஸ்டன் விளையாட்டரங்கில் திரண்டிருந்த 68,278 ரசிகர்கள் மத்தியில் வோஸின்ஹாவுக்கு எல்லோரையும் விட ஒரு முக்கியமான விசிறி இருந்தார். முக்கியஸ்தர்களுக்கான பார்வையாளர் கூடத்தில் அமர்ந்து, கேப் வெர்டேவின் சிறிய கொடியை அசைத்தவாறு அவரது தாயார் அனா கெண்டிடா எவோரா, தனது மகனின் மாயாஜாலங்களை நேரடியாக் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில்  வோஸின்ஹா   7 முறை கோல் விழாமல் தடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை விசா சிக்கல்கள் காரணமாக அவர் தவறவிட்டிருந்தார். அதன் பின்னர் அமெரிக்கா ராஜாங்க அமைச்சரின் பரிந்துரையை அடுத்து அவருக்கு இனாமாக விசா வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் தனது மகனின் அசாத்திய திறமையை நேரில் பார்க்கும் இரண்டாவது போட்டி இதுவாகும்.

தவறவிடப்பட்ட வாய்ப்புகள் போட்டியின் 50-ஆவது நிமிடத்தில் கேப் வெர்டேவுக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் சற்று தூரத்திலிருந்து கெவின் பினா பலமாக உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு சற்று மேலாக வெளியே சென்றது. மீண்டும் 74-ஆவது நிமிடத்தில் மற்றொரு வாய்ப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. லாரோஸ் டுவார்டே பெனால்டி எல்லையின் நடுவிலிருந்து உதைத்த பந்தை சவுதி கோல்காப்பாளர் மொஹமத்  அல்-ஒவைஸ் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் கடைசி செக்கன்களில் பெனல்டி எல்லைக்குள் இருந்து நுனோ டா கோஸ்டா உதைத்த பந்து இடதுபுறமாக விலகிச் செல்ல, கோல் அடிப்பதற்கான கடைசி வாய்ப்பும் நழுவிப்போனது. இருப்பினும், ஆட்டத்தின் கடைசி விசிலுக்குப் பின்னர் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் சில நிமிடங்களில், உருகுவேக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் தனது வெற்றியை உறுதி செய்தது. இது கேப் வெர்டே வீரர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் பேரானந்தத்தை ஏற்படுத்தியது. அரங்கில் இருந்த கேப் வேர்டே ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தி வரலாற்றுப் பயணக் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.