பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதை பெற்றோர்கள் வீட்டிலிருந்தபடியே ஆரம்பகட்டத்தில் பரிசோதித்தறியக்கூடிய விசேட போதைப்பொருள் சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் ஊடாக விற்பனைக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ந…
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதை பெற்றோர்கள் வீட்டிலிருந்தபடியே ஆரம்பகட்டத்தில் பரிசோதித்தறியக்கூடிய விசேட போதைப்பொருள் சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் ஊடாக விற்பனைக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டில் நச்சுப் போதைப்பொருள் பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டுத் திட்டம் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் முப்பீட மகா சங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்களும் பங்கேற்றனர்.
இதன்போது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் போதைப்பொருள் பயன்பாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் வகையில் Drug Test Kits-ஐ மருந்தகங்கள் மூலம் பொதுமக்கள் எளிதில் கொள்வனவு செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நவீனமயமாக்கல், இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயல்திறனை மேம்படுத்துதல், பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவில் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

