பதுளை மாவட்டம் மஹியங்கனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் உள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், பூஜாப…

பதுளை மாவட்டம் மஹியங்கனை தேர்தல் தொகுதிக்குட்பட்ட ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் உள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மற்றொருவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி பகுதியிலிருந்து 33 பேர் கொண்ட குழுவொன்று சுற்றுலாவிற்காக லொக்கல்லா ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இயங்கி வந்த சுற்றுலா தலத்திற்கு சென்றிருந்தது. பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அந்த சுற்றுலா தலத்திற்குச் சொந்தமான இரண்டு சிறிய படகுகளை இணைத்து தயாரிக்கப்பட்ட மிதவைப்படகில், குளத்தின் நடுவிலுள்ள சிறிய தீவுக்கு நீராடச் சென்றுள்ளனர்.

தீவில் நீராடிவிட்டு கரைக்குத் திரும்பியபோது, மிதவைப்படகு உடைந்து கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நேர்ந்த போது அந்த மிதவைப்படகில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் பயணித்ததாகவும், அவர்களில் பாதுகாப்பு அங்கி அணியாத இருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் கிராம மக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், காணாமல் போன இருவரின் சடலங்களும் நேற்று காலை மீட்கப்பட்டன.

சம்பவ இடத்துக்கு சென்ற மஹியங்கனை பதில் நீதிவான் எஸ். கோவின்ன ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலங்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரிதீமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.