பதுளை, ரிதிமாலியத்த பகுதியில் அமைந்துள்ள லொக்கல் ஆற்று நீர்த்தேக்கத்தில் படகு ஓட்டிச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், கண்டி, கட்டுகஸ்தோட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயது நபரும், கண்டி, பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயது நபரும் ஆவர்.பிறந்தநாள் கொண்டாட்டம்…

பதுளை, ரிதிமாலியத்த பகுதியில் அமைந்துள்ள லொக்கல் ஆற்று நீர்த்தேக்கத்தில் படகு ஓட்டிச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள், கண்டி, கட்டுகஸ்தோட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயது நபரும், கண்டி, பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயது நபரும் ஆவர்.பிறந்தநாள் கொண்டாட்டம் கண்டி பகுதியைச் சேர்ந்த 33 பேர் கொண்ட குழு ஒன்று, லொக்கல் ஆற்று நீர்த்தேக்கப் பகுதியில் பண்ணை நடத்துவது போல் செயல்பட்டு வந்த ஒரு சுற்றுலாத் தலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (28) வந்தடைந்தார்கள்.

குறித்த குழுவினர் அவ்விடத்திற்கு வந்து பிறந்தநாள் விழா கொண்டாடிய பின்னர், அவ்விடத்திற்குச் சொந்தமான இரண்டு சிறிய படகுகளை ஒன்றாகப் பாதுகாப்பற்ற முறையில் கட்டி உருவாக்கப்பட்ட ஒரு மிதவையில், சுற்றுலாத் தலத்தின் நடுவில் உள்ள ஒரு சிறிய தீவிற்குச் சென்றுள்ளனர்.

தீவில் குளித்துவிட்டு கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்ததால் குறித்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில், மூன்று சிறு குழந்தைகள் உட்பட 11 சுற்றுலாப் பயணிகள் படகில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களில் இருவர் உயிர் காப்பு அங்கி அணியாததால் நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும், பொலிசார் மற்றும் கிராமவாசிகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை (29) அவர்களது உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இரு உடல்களையும் மஹியங்கன தடயவியல் மருத்துவப் பரிசோதகரிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடித்தக்கது.