அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் வங்கி அட்டைகள் மூலம் பொதுமக்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் பிரத…
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் வங்கி அட்டைகள் மூலம் பொதுமக்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது பதிவாளர் பிரிவு மற்றும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரப் பிரிவுகளுக்கான பி.ஓ.எஸ் இயந்திரங்களை பிரதமர் உத்தியோகபூர்வமாக இயக்கி வைத்தார்.
அத்துடன், இந்த புதிய முறையைப் பயன்படுத்தி பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படும் நடைமுறையையும் பிரதமர் அடையாள ரீதியாக பார்வையிட்டார்.
இலங்கை வங்கியின் நிதி மற்றும் தொழில்நுட்ப அனுசரணையுடன், கொழும்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலக அலுவலகங்களும் இந்த திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், பணமாக செலுத்தும் முறைக்கு மாற்றாக பாதுகாப்பான அட்டை வழியிலான கொடுப்பனவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையின் பொதுத்துறையை நவீனமயமாக்குவது அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும் என பிரதமர் ஹரினி அமரசூரிய இதன் போது தெரிவித்தார். (a)

