ஹரக் கட்டா விவகாரத்தில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்க, பிரித்தானிய நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளரும்,வெலிகம நகர சபையின் முன்னாள் நகரபிதாவுமான ரொஹான்…

ஹரக் கட்டா விவகாரத்தில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்க, பிரித்தானிய நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளரும்,வெலிகம நகர சபையின் முன்னாள் நகரபிதாவுமான ரொஹான் ஜயவிக்ரம, கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.அதிர்ச்சித் தகவல் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, தற்போதைய சட்டச் சூழல் காரணமாக சில நபர்களின் பெயர்களை பகிரங்கமாக சொல்ல முடியாது என்றாலும், கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர், முன்னர் பிரித்தானியாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பின்னர் இந்நாட்டிற்கு வந்துள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான எரான் விக்ரமரத்ன, கிரிக்கெட் சபையின் தலைவராகப் பொறுப்பேற்றபோது, ​​இந்த சந்தேக நபர் பல்வேறு இடங்களில் அதனை கட்சிக்கு எதிரான மற்றும் துரோகச் செயல் என்று முத்திரை குத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், கட்சியின் மற்றொரு முக்கிய அரசியல்வாதியான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவையும் அவர் ஊடகங்கள் மூலம் பகிரங்கமாகத் தொடர்ந்து தாக்கி வருகிறார். ஏதேனும் தவறு நடந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஆனால் கட்சியில் உள்ள சிரேஷ்ட தலைவர்களை நீக்குவதற்கு இதுபோன்ற நபர்களைப் பயன்படுத்துவது கவலைக்குரியதொரு விடயமாகும்.சரித் அபேசிங்க எந்தத் தகுதியுமின்றி கட்சிக்குள் சில நபர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டதன் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தற்போது ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கட்சித் தலைமைக்கு சவாலாக அமையக்கூடிய அல்லது தனக்குப் பிடிக்காத ஹர்ஷ மற்றும் எரான் போன்ற மூத்த தலைவர்களைக் கட்சியிலிருந்து விலக்கி வைப்பதற்கும், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் கட்சிக்குள் இதுபோன்ற தனிநபர் மீதான அவதூறு தந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் இப்போது தங்கள் செயல்களின் பலனை அறுவடை செய்கிறார்கள். எதிர்காலத்தில் கட்சிக்குள் ஏற்படும் உட்கட்சி மோதல்களுக்காக நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ரொஹான் ஜயவிக்ரம எச்சரித்துள்ளார்.

அத்துடன் முந்தைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் எதுவித பேதமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தும் விதம் பொதுமக்களைக் கவர்ந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 28 June, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.