காலி எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கைது செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு, பின்னர் மற்றொரு குழுவினரின் உதவியுடன் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சோதனை நடவடிக்…

காலி  எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கைது செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு, பின்னர் மற்றொரு குழுவினரின் உதவியுடன் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சோதனை நடவடிக்கைக்காக கஹதுவ பகுதிக்குச் சென்றிருந்த எல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழுவை நோக்கி அங்கிருந்த சிலர் தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதன்போது நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.மேலதிக விசாரணை அதனைத் தொடர்ந்து, இரண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இரு பொலிஸ் அதிகாரிகள் அவர்களில் ஒருவரைக் கைது செய்ய முயன்றுள்ளனர்.அந்தச் சந்தர்ப்பத்தில், குறித்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார் சந்தேகநபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் அங்கு வந்த மற்றொரு குழுவினர் அவரை மீட்டுச் சென்று தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய சந்தேகநபர், கொலைச் சம்பவம் ஒன்றுக்கு ஆதரவளித்ததுடன் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கூரிய ஆயுதத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.