போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள…

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்திற்கு அமைய, நிறுவன மட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்கள், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் மற்றும் போதைப்பொருள்  அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அந்தந்த நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது இங்கு வெளிப்படுத்தப்பட்டதுடன், கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை  மாணவர்களுக்கிடையில் போதை பொருள் பாவனையை  தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டு அறிந்தமையுடன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பூட்டும் வேலை திட்டங்கள் உள்ளிட்ட 225 திட்டங்கள் தற்போது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உப வேந்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கிடையிலேயே குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் பரவல் தொடர்பாக நாடளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்வி அமைச்சின் முன்னெடுப்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து, பொதுவான திட்டமொன்றின் கீழ் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். (a)