(செ.சுபதர்ஷனி) பொசோன் பண்டிகை காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 10 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (27) ஊடகங்களு…

(செ.சுபதர்ஷனி) பொசோன் பண்டிகை காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 10 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (27) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகை காலங்களில் ஏனையோருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வாகன சாகசங்கள், பந்தயம் மற்றும் இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் பயணிப்போர் தொடபிலும் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பொசோன் காலத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 10 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மைய காலமாக நாட்டில் நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. பொசோன் பௌர்ணமி தின விடுமுறை காரணமாக பலர் வெளியூர்களுக்குச் செல்லக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது நீர் நிலைகளில் நீராடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுங்கள். அத்தோடு பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீட்டின் கீழ் இவ்வருடம் முதல் நீர் நிலை விபத்துகளைத் தவிர்ப்பதற்காக விசேட வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 31 பொலிஸ் நிலையங்களைப் பிரதான கேந்திர நிலையங்களாகக் கொண்டு பொலிஸ் கடற்படை பிரிவுகளில் பொலிஸ் உயிர்பாதுகாப்பு அதிகாரிகள் இக்கட்டான சந்தர்ப்பங்களின் போதும், ஏனையவற்றின் போதும் பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்கத் தயாராக உள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நீர் நிலை விபத்துகளில் சிக்கி 75 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு கடந்த வருடம் 450 பேரும் 2024 ஆம் ஆண்டு 595 பேரும் இதனால் மரணித்துள்ளனர். ஆகையால் அபாயகரமான பகுதிகள் எனப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மற்றும் பழக்கமில்லாத நீர் நிலைகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.