வாகன இறக்குமதிக்கான மேலதிக கட்டணம் (Surcharge) விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் அளவில் தெளிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இறக்குமதி நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்த காலப்பகு…
வாகன இறக்குமதிக்கான மேலதிக கட்டணம் (Surcharge) விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் அளவில் தெளிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இறக்குமதி நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்த காலப்பகுதியில், நாளொன்றுக்கு சராசரியாக 400 முதல் 450 வரையான இறக்குமதிப் பதிவுகள் பதியப்பட்டு வந்ததுடன், சில தினங்களில் அது 800 வரை உயர்ந்திருந்தது.
எவ்வாறாயினும், புதிய மேலதிக கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இந்தத் தினசரிப் பதிவுகளின் எண்ணிக்கை தற்போது 300 முதல் 350 ஆகக் குறைவடைந்துள்ளது.
பிரதான வாகன முகவர்களினால் ஒரு இறக்குமதிப் பதிவின் கீழ் 50 முதல் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை ஒரே தடவையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியும் என்பதால், பதிவுகளில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியானது ஒட்டுமொத்த வாகன இறக்குமதி எண்ணிக்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, விதிக்கப்பட்ட மேலதிக கட்டணம் காரணமாக தற்போது வாகன இறக்குமதி அளவு கணிசமாகக் குறைந்துள்ளமை தெளிவாக நிருபணமாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதியின் போதான, 50 சதவீத மேலதிக கட்டணமானது கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மூன்று மாத காலத்துக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த கட்டணம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், அதாவது மே 15 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ வங்கிகளில் நாணய கடிதங்கள் (L/C) திறக்கப்பட்டு முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்த மேலதிக கட்டண விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

