சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீட வளாகம் பிரதமர் தலைமையில் மாணவர் பயன்பாட்டிற்கு இன்று (4) கையளிக்கப்பட்டது. நாட்டுமக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இந்த புதிய மருத்த…

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீட வளாகம் பிரதமர் தலைமையில் மாணவர் பயன்பாட்டிற்கு இன்று (4) கையளிக்கப்பட்டது.

நாட்டுமக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இந்த புதிய மருத்துவபீட வளாகம் திறக்கப்பட்டுள்ளது.இங்கு கருத்துரைத்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாட்டுமக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய இலக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக சபரகமுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மருத்துவபீட வளாகத்தைக் குறிப்பிடலாம் என தெரிவித்தார்.

அத்தோடு, மருத்துவக் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக, மாற்றம் பெற்று வரும் சமூகத் தேவைகளையும் உலகளாவிய சுகாதாரப் போக்குகளையும் பூர்த்தி செய்யக்கூடிய, அறிவையும் ஒழுக்கநெறிப் பண்புகளையும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் தற்போது ஏறத்தாழ 750 மாணவர்கள் கற்று வரும் அதேவேளை, வருடாந்தம் சுமார் 160 மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக இப்பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.இப்புதிய மருத்துவபீட வளாக நிர்மாணத் திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் சுமார் 2,876 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட்டுள்ளதுடன், சவூதி அரேபிய அரசு சுமார் 15 பில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கியிருக்கின்றது.

இப்பீட வளாகம், ஒரே தடவையில் 500 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கக்கூடிய விடுதி மற்றும் 1,060 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் அமரக்கூடிய கேட்போர்கூடம் மற்றும் நிர்வாகக் கட்டிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது.

250 ஆசனங்களைக் கொண்ட இரண்டு விரிவுரைக்கூடங்களையும், 200 மாணவர்கள் அமரக்கூடிய ஒரு விரிவுரைக்கூடத்தினையும், சுமார் 160 மாணவர்கள் அமரக்கூடிய மூன்று விரிவுரைக்கூடங்களுமாக மொத்தம் ஆறு விரிவுரைக்கூடங்கள் இவ்வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், மருத்துவ முற்கல்வி மையம், நூலகம், உணவகங்கள் மற்றும் ஊழியர் விடுதி போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ள இம்மருத்துவபீட வளாகம் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கின்றது.

அத்துடன், இம்மருத்துவபீட நிர்மாணத் திட்டத்திற்கு இணையாக, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையை மையப்படுத்தி, முழுமையான ஆய்வகங்கள் மற்றும் இதர வசதிகளைக் கொண்ட ஒன்பது மாடிகளைக் கொண்ட பேராசிரியர்கள் பிரிவு ஒன்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.