கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழு ஒன்றையும், பிரதி காவல்துறைமா அதிபர் தலைமையிலான முழு அதிகாரம் கொண்ட விசேட காவல்துறை பிரிவொன்றையும் அமைக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யும…
கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழு ஒன்றையும், பிரதி காவல்துறைமா அதிபர் தலைமையிலான முழு அதிகாரம் கொண்ட விசேட காவல்துறை பிரிவொன்றையும் அமைக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு அல்லது இடைநிறுத்துமாறு கோரி, இலங்கை நீதிக்கான மய்யம் அமைப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடலோர அத்துமீறல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கை என அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
காணி ஆக்கிரமிப்புகளும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் உரிய பிரச்சினைகள் அல்ல என்றும், அவை தெற்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காணப்படும் தேசியப் பிரச்சினைகள் என்றும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் இத்தகைய விசேட குழுவை அமைப்பது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) உறுப்புரைகள் இன, மத மற்றும் பிராந்திய பாகுபாடின்றி சமத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன என்றும், இந்த ஒருதலைப்பட்சமான மாகாண பொறிமுறையானது அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரச காணிகள் (பொறுப்பேற்பு மீட்பு) சட்டம், அரச காணிகள் சட்டம், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட போதுமான சட்டக் கட்டமைப்புகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், புதிய குழுக்களை அமைப்பதன் அவசியம் என்ன என்ற கேள்வியையும் அமைப்பு எழுப்பியுள்ளது.
மகாவலி அதிகார சபை உள்ளிட்ட காணி தொடர்பான பிரச்சினைகளை தற்போதுள்ள சட்டங்களின் கீழ் பிரதேச செயலாளர்கள் மற்றும் காவல்துறையினரின் ஊடாகத் தீர்க்க முடியும் என்றும், நாட்டுக்குத் தேவைப்படுவது புதிய குழுக்கள் அல்ல மாறாக, உள்ள சட்டங்களை ஒன்பது மாகாணங்களிலும் பாரபட்சமின்றி சமமாக அமுல்படுத்துவதற்கான அரசியல் விருப்பமே என்றும் இலங்கை நீதிக்கான மய்யம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, சர்ச்சைக்குரிய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக இடைநிறுத்தி, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொதுமக்கள் ஆலோசனைகளை நடத்துவதுடன், சட்டங்களை நாடு முழுவதும் சமத்துவத்தின் அடிப்படையில் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு தனது கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

