தாய்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக, சர்வதேசக் கடத்தல் கும்பல்கள் விமானப் பணியாளர்களை சமூக வலைத்தளங்கள் மூலம் அணுகி வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் 'தாய் ஏர்வேஸ்' நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவர் அ…
தாய்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக, சர்வதேசக் கடத்தல் கும்பல்கள் விமானப் பணியாளர்களை சமூக வலைத்தளங்கள் மூலம் அணுகி வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் 'தாய் ஏர்வேஸ்' நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ஹெரோயின் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ரகசிய வலையமைப்பு அம்பலமாகியுள்ளது.ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அந்தப் பணிப்பெண்ணிடம் இருந்து சுமார் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வெறும் 8,800 தாய் பாட் கடத்தல் கூலிக்காக, பேஸ்புக்கில் அறிமுகமான ஒரு நபரின் பைகளை அவுஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் டிக்டொக் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளைத் தொடங்கி விமானப் பணியாளர்களைக் குறிவைக்கின்றன. "நீங்கள் அவுஸ்திரேலியா செல்கிறீர்களா? எங்களுக்காகப் பொருட்களை எடுத்துச் சென்றால் எவ்வளவு கட்டணம் பெறுவீர்கள்?" என்பது போன்ற கேள்விகளுடன் அறிமுகமில்லாத கணக்குகளில் இருந்து அவர்களுக்குச் செய்திகள் அனுப்பப்படுகின்றன.
மியன்மார் போன்ற அண்டை நாடுகளில் உற்பத்தியாகும் இந்த ஹெரோயின், ஆடைகள், கோப்பி தூள் பக்கற்றுகள் மற்றும் குளிர்கால ஜாக்கெட்டுகள் போன்றவற்றின் உள்பகுதியில் மிக நுட்பமாக மறைக்கப்பட்டு தாய்லாந்து வழியாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகிறது.போதைப்பொருள் கடத்தல் இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் தாய்லாந்தில் இருந்து பயணம் செய்த ஆறுக்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
இது நாட்டின் நற்பெயரைக் கெடுப்பதாகத் தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, தாய்லாந்து விமான நிலையங்களில் விமானக் குழுவினரின் உடைமைகளைச் சோதனையிடும் நடைமுறைகள் இனி மேலும் தீவிரப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவுஸ்திரேலியா மற்றும் தாய்வானுக்கு இதே முறையில் கடத்தப்பட இருந்த சுமார் 24 கிலோ ஹெரோயினைத் தாய்லாந்து அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாகத் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு நபரும், லாவோஸ் நாட்டைச் சேர்ந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து எந்தவொரு பொருளையும் கட்டணத்துக்காகவோ அல்லது உதவிக்காகவோ பெற்று எடுத்துச் செல்ல வேண்டாம் என விமானப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.

