தங்கள் நாட்டின் வான்வெளியை மீறினாலோ அல்லது தாக்குதல் நடத்த முயன்றாலோ, சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய சொத்துக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சவுதி அரேபியா தங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக ஈர…
தங்கள் நாட்டின் வான்வெளியை மீறினாலோ அல்லது தாக்குதல் நடத்த முயன்றாலோ, சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய சொத்துக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சவுதி அரேபியா தங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். யேமன் ஆயுதப்படை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சனா சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நாட்டு சிவிலியன் விமானம் ஒன்று தரையிறங்குவதைத் தடுக்க முயன்ற சவுதி அரேபியாவின் "போர்விமானங்களை" தங்களது படைகள் எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹூதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கள் வான்வெளியை மீறும் முயற்சியையோ அல்லது எங்கள் நாட்டின் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையோ மீண்டும் செய்ய வேண்டாம் என குற்றவாளியான சவுதி எதிரிக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் சவுதியின் விமான நிலையங்கள், நிலம் மற்றும் கடலில் உள்ள அதன் முக்கிய தேவைகளை இலக்காகக் கொண்ட ஒரு விரிவான பதிலடியைச் சந்திக்கும் என கூறியுள்ளார். மேலும், வெள்ளிக்கிழமை அதிகாலை 5:20 மணியளவில், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட 200-க்கும் மேற்பட்ட குடிமக்களை ஏற்றி வந்த ஈரானிய சிவிலியன் விமானம் சனாவில் தரையிறங்குவதைத் தடுக்க, சவுதி போர்விமானங்கள் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளிக்குள் "ஊடுருவ" முயன்றதாகவும், அந்த முயற்சியை தங்களது படைகள் முறியடித்ததாகவும் சாரீ தெரிவித்தார். ஏற்படக்கூடிய "விளைவுகள்" எதையும் பொருட்படுத்தாமல் சனா மற்றும் தெஹ்ரான் இடையேயான விமானச் சேவைகள் தொடர்ந்து நடைபெறும் என ஹூதி தரப்பு கூறியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கச் சென்ற ஹூதி தூதுக்குழுவை ஏற்றிக்கொண்டு, அந்த ஈரான் விமானம் வெற்றிகரமாக மீண்டும் தெஹ்ரானுக்குப் புறப்பட்டுச் சென்றதாக ஹூதி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சவுதி-அமெரிக்க முற்றுகையை உடைப்பதற்கான எந்தவொரு உத்தரவையும் செயல்படுத்த தங்களது படைகள் தயாராக இருப்பதாகவும், அவர்களின் "விரல்கள் துப்பாக்கியின் விசையில் இருப்பதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

