சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து, சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான கிங்டாவ் நகரின் கடல் மற்றும் வான்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை நடைபெறும் இந்த "கூட்டுக்கடல்-…
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து, சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான கிங்டாவ் நகரின் கடல் மற்றும் வான்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை நடைபெறும் இந்த "கூட்டுக்கடல்-2026" பயிற்சியைத் தொடர்ந்து, பசுபிக் பெருங்கடல் பகுதியில் இரு நாடுகளும் இணைந்து கூட்டு ரோந்துப் பணிகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.கூட்டு இராணுவப் பயிற்சி பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், சவால்களை எதிர்கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட இந்தப் பயிற்சியில், ரஷ்யாவின் பசிபிக் கடற்படையைச் சேர்ந்த ஏவுகணை ஏந்திச் செல்லும் போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மீட்புக் கப்பல்களும், சீனாவின் வடக்கு தியேட்டர் கமாண்டைச் சேர்ந்த அழிப்புவகை போர்க்கப்பல்கள், போர்க்கப்பல் மற்றும் விநியோகக் கப்பல்களும் பங்கேற்கின்றன.
விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுத்தல், வான்வழி உளவு பார்த்தல் மற்றும் கடல்வழித் தாக்குதல் போன்ற பல்வேறு கூட்டுப் பயிற்சிகள் இதில் மேற்கொள்ளப்படவுள்ளன.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளும் இத்தகைய கூட்டுப் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை சீனா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்காத சூழலில், அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு மாற்றாக இரு நாடுகளும் தங்களின் பலமான பொருளாதார மற்றும் இராணுவ உறவை இந்த கூட்டுப் பயிற்சி மூலம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

