சீனாவில் வசிக்கும் பல்வேறு இனக்குழுக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதாகக் கூறி அந்நாட்டு அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 'இன ஒற்றுமை மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுச் சட்டம்' நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸால் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்…
சீனாவில் வசிக்கும் பல்வேறு இனக்குழுக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதாகக் கூறி அந்நாட்டு அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 'இன ஒற்றுமை மற்றும் வளர்ச்சி மேம்பாட்டுச் சட்டம்' நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸால் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், திபெத் மற்றும் சின்ஜியாங் போன்ற பகுதிகளில் சிறுபான்மையினரை வலுக்கட்டாயமாக சீனப் பண்பாட்டிற்குள் மாற்றவே உதவும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன. சர்வதேச அளவில் எதிர்ப்பு
குறிப்பாக, இச்சட்டத்தின் 63-ஆவது பிரிவு, சீனாவிற்கு வெளியே வாழும் தனிநபர்கள் அல்லது அமைப்புகள் சீனாவின் இன ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலோ அல்லது பிரிவினையைத் தூண்டும் வகையிலோ செயல்பட்டால், அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சீனாவுக்கு அதிகாரம் அளிக்கிறது.
சீனாவின் இந்த எல்லை கடந்த சட்ட அதிகாரம், வெளிநாடுகளில் வாழும் சீன அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்து ஒடுக்குவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படலாம் என 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' போன்ற அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இச்சட்டம் தாய்வான் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதால், தாய்வான் ஜனாதிபதி வில்லியம் லாய் சிங்-தே தனது நாட்டு மக்கள் சீனாவுக்குப் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, மேற்கத்திய ஊடகங்கள் இச்சட்டத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறியுள்ள சீன அரசு அதிகாரிகள், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பேணவும், பிரிவினைவாத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இத்தகைய சட்டப்பிரிவுகள் முற்றிலும் அவசியமானவை என்று தற்காத்துப் பேசியுள்ளனர்.

