அம்பாறை மாவட்டத்தில் கார் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற சந்தேக நபர்களை, பொலிஸார் சினிமா பாணியில் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சம்பவம் சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட குற்றப் புலன…
அம்பாறை மாவட்டத்தில் கார் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற சந்தேக நபர்களை, பொலிஸார் சினிமா பாணியில் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சம்பவம் சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது
பொலிஸார் வருகையை அறிந்ததும், குறித்த வீட்டின் அருகில் இருந்த இருவர் காரில் தப்பிச் சென்றனர். அவர்களுக்கு வழிகாட்ட மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு சந்தேக நபரையும் பொலிஸார் முதலில் கைது செய்தனர்.
தப்பிச் சென்ற காரைத் துரத்திச் சென்ற பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க, மங்காத்தா திரைப்பட பாணியில் தனது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி, தப்பிச் சென்ற காரின் மீது தலைக்கவசத்தை (Helmet) வீசி அதனை மறித்து தடுத்து நிறுத்தினார். சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32, 33 மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பின்வரும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன:
15 கிராம் 370 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள்.
சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்.
இரு கைத்தொலைபேசிகள், வங்கி அட்டைகள் மற்றும் ஒரு தொகை பணம்.
சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைப்பதற்கு முன்னரே, பெருமளவிலான போதைப்பொருட்கள் பல விநியோகஸ்தர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவு அதிகாரிகள் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலிலும், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையிலும் இந்தத் துல்லியமான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த மாதம் நிந்தவூர் பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த 23 வயதுடைய பெண் சந்தேக நபர் ஒருவரையும் இதே பொலிஸ் குழுவினர் கைது செய்திருந்தனர். அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் பட்டாசு கொளுத்தி பொலிஸாருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்

