தென் கரோலினாவில் உள்ள கிர்க்லேண்ட் (Kirkland) சிறைச்சாலையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 36 வயதான கோர்ட்னி வில்லியம்ஸ், சிறை கைதி ஒருவருடன் பாலியல் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

தென் கரோலினாவில் உள்ள கிர்க்லேண்ட் (Kirkland) சிறைச்சாலையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 36 வயதான கோர்ட்னி வில்லியம்ஸ், சிறை கைதி ஒருவருடன் பாலியல் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிச்லாண்ட் கவுண்டி அரசு வழக்கறிஞர்கள் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 30 முதல் மே 29 வரையிலான காலக்கட்டத்தில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சிறை வளாகத்திற்குள்ளேயே வில்லியம்ஸ் கைதியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

அந்த கைதிக்காக வில்லியம்ஸ் சட்டவிரோதமாக ஒரு கைப்பேசியைச் சிறைக்குள் கடத்திச் சென்று கொடுத்துள்ளார்.

அந்த கைப்பேசி வழியாக இருவரும் சுமார் 1,000 குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொண்டதோடு, மிகவும் ஆபாசமான உரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த கைப்பேசியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம், அவர்கள் இருவரும் சிறை அறைக்குள் உடலுறவு கொண்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த முறைகேடு குறித்த விசாரணை தொடங்கப்பட்டவுடன், வில்லியம்ஸ் தனது தென் கரோலினா சிறைத்துறைப் பணியை உடனடியாக ராஜினாமா செய்தார். அதன் பிறகு, அவர் சிறார் நீதித் துறையில் (Department of Juvenile Justice) செவிலியராகப் பணியில் சேர்ந்தார். எனினும், விசாரணை தீவிரமடைந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் அங்கிருந்தும் அவர் விலகியுள்ளார்.

தற்போது வில்லியம்ஸ் மீது கைதியுடன் முதல் நிலை பாலியல் முறைகேடு மற்றும் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சட்டப்படி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறைத்துறை அதிகாரிகள், "சிறை ஊழியர்கள் கைதிகளுடன் இத்தகைய எல்லைமீறிய உறவுகளில் ஈடுபடுவது, ஒட்டுமொத்த சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது" என்று கவலை தெரிவித்துள்ளனர்.

கோர்ட்னி வில்லியம்ஸின் கைது, சிறைச்சாலைகளில் உள்ள பணியாளர்களின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.