கிளிநொச்சி நகரப் பகுதியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமாக புகைப் பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் அதிரடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் சிறுவர்களை இலக்கு வைத்து ச…

கிளிநொச்சி நகரப் பகுதியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமாக புகைப் பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் அதிரடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் சிறுவர்களை இலக்கு வைத்து சிகரெட் மற்றும் பீடி உள்ளிட்ட புகைப் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஒரு சிறுவனிடம் பணம் வழங்கி குறிப்பிட்ட வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி புகைப் பொருட்களை வாங்கும் வகையில் பொலிஸார் இரகசிய சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த சிறுவன் பல வர்த்தக நிலையங்களில் புகைப் பொருட்களை வாங்கியதும், அங்கு மறைந்திருந்த பொலிஸார் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.

மேலும் நகரின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சோதனைகளின் போது, சிறுவர்களுக்கு புகைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மொத்தம் 13 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.