சிறுவர்களைப் பணிகளில் அமர்த்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10,000 ரூபாயிலிருந்து 1 இலட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி, ஏதேனும் ஒரு பொதுத்துறை அல்லது தனியார் வர்த்தக நிறுவனத்தில் சிறுவர்களைப் பணிகளில் அம…

சிறுவர்களைப் பணிகளில் அமர்த்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10,000 ரூபாயிலிருந்து 1 இலட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி, ஏதேனும் ஒரு பொதுத்துறை அல்லது தனியார் வர்த்தக நிறுவனத்தில் சிறுவர்களைப் பணிகளில் அமர்த்தி, அது தொடர்பான வழக்கு விசாரணையில் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் ஒரு நபர் 1 இலட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்த நேரிடும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான 'பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களைப் பணிகளில் அமர்த்துவது தொடர்பான சட்டமூலத்தை' திருத்தம் செய்வதற்கான முன்மொழிவை தொழிலாளர் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இந்த புதிய சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தமானி மூலமும் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் மூலம் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் பணிகளில் அமர்த்துவது குற்றமாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாகும் நபருக்கு 1 இலட்சம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன் கூடுதலாக 12 மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்கு இருவகை சிறைத்தண்டனைகளில் (சாதாரண அல்லது கடுங்காவல்) ஏதேனும் ஒரு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டவரைவின்படி, குற்றவாளியாகும் நபர் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டு தண்டனைகளுக்கும் அல்லது இரண்டில் ஒன்றிற்கு உள்ளாக நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.