புதிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான சுஜீஸ்வர பண்டாரவை ஜூலை 8 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் செலவின வாக்குகளின் கீழ் இரண்டு…
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான சுஜீஸ்வர பண்டாரவை ஜூலை 8 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செலவின வாக்குகளின் கீழ் இரண்டு பதவிகளுக்கான சம்பளத்தைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய அதே காலப்பகுதியில், ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் பணியாற்றி, இரண்டு பதவிகளுக்கும் சம்பளம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜூன் 12, 2026 அன்று பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ தாக்கல் செய்த பிணை மனு மீதான கட்டளையை ஜூலை 8 ஆம் திகதி அறிவிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கூறிய பதவிகளை வகித்த காலத்தில், அரச வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக அரச ஊழியர்களைப் பயன்படுத்தியமை தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த மேலதிக விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

