சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்கள…
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் இலவச சுகாதார சேவை அமைப்பின் தரத்தை மேம்படுத்துதல், வைத்தியசாலைக் கட்டமைப்பை மேலும் திறம்படச் செய்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நீண்ட காலத்திற்குப் பின்னர் சுகாதாரப் பணி உதவியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் முதற்கட்ட சுகாதாரப் பணி உதவியாளர்களாக 627 பேருக்கு நாளை (04) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
சுகாதாரப் பணி உதவியாளர் நியமனங்களை பல கட்டங்களின் கீழ் வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜூலை 18 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக 600 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும், ஒகஸ்ட் 01 ஆம் திகதி மூன்றாம் கட்டமாக 762 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும், அதேபோன்று 295 கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களுக்கும் மற்றும் 121 சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஜூலை 16 ஆம் திகதி 247 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

