சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.…
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் இலவச சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துதல், வைத்தியசாலைகளின் செயற்பாட்டு திறனை உயர்த்துதல் மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
இதன்படி, மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீண்டகாலமாக நிலவி வந்த சுகாதாரப் பணி உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் 627 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு நாளை (04) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 16 ஆம் திகதி 247 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கும், ஜூலை 18 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக 600 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், ஒகஸ்ட் 1 ஆம் திகதி மூன்றாம் கட்டமாக 762 சுகாதாரப் பணி உதவியாளர்கள், 295 கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் 121 சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

