கதிர்காமம் நோக்கி பக்தர்களுடன் வந்த நாய் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த நபர் மன்னிப்புக் கோரியுள்ளார். குறித்த நபர், அந்த நாய் யாத்திரிகர்களுடன் வரும் நாய் என்பது தெரியாமல் தவறுதலாகத் தாக்கியதாகத் தெ…

கதிர்காமம் நோக்கி பக்தர்களுடன் வந்த நாய் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த நபர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

குறித்த நபர், அந்த நாய் யாத்திரிகர்களுடன் வரும் நாய் என்பது தெரியாமல் தவறுதலாகத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். எனினும், காணொளிக் காட்சிகளைப் பார்க்கும்போது நாய் பலமாகத் தாக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது குறித்துப் பொதுமக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவத்தை ஒரு தனிநபரின் தவறான செயலாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், இதனை இனப் பிரச்சினையாகவோ அல்லது இன ரீதியான பிளவுகளை உண்டாக்கும் வண்ணம் சித்தரிக்கவோ வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு தனிநபரின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை, ஒட்டுமொத்த இனத்தின் செயலாகக் கருதி சமூக அமைதியைக் குலைப்பது தவறான அணுகுமுறை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், தவறு செய்த நபர் மன்னிப்புக் கோரியிருந்தாலும், எந்தவொரு உயிரினத்தையும் வதைப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை.

எனவே, மனிதாபிமான அடிப்படையில் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இச்சம்பவம் தொடர்பாகச் சட்டரீதியான விசாரணைகளை முன்னெடுத்து, தவறு செய்தவருக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விலங்கு வதைக்கு எதிரான சட்டங்களை முறையாக அமுல்படுத்துவதன் மூலமே, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.