கிறபுந்தென் மாநிலத்தில்1989ஆம் ஆண்டு ஜுலை 02 அன்று சூர் நகரில் நடந்த தீவைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு இலங்கைத் தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வு வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றுள்ளது. அதேவேளை, கூர் நகரசபையினால் உயிரிழந்தவர்களை நினைவேந்தும் வகையில் புதிதாக பெயரிடப்பட்…
கிறபுந்தென் மாநிலத்தில்1989ஆம் ஆண்டு ஜுலை 02 அன்று சூர் நகரில் நடந்த தீவைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு இலங்கைத் தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வு வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றுள்ளது. அதேவேளை, கூர் நகரசபையினால் உயிரிழந்தவர்களை நினைவேந்தும் வகையில் புதிதாக பெயரிடப்பட்ட வீதியும், நினைவுப் பலகையும் தமிழ் மொழியிலும் திறந்து வைக்கப்பட்டது. இந்த உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதல் இனவெறி நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் (சந்தேகம்) நீண்ட காலமாக இருந்து வருகிறது.37 ஆண்டுகள் நிறைவு இத்தாக்குதல் நடைபெற்று 37 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள பெயரிடப்படாத ஒரு சிறிய தெருவுக்கு "நான்கு விளக்குகள் வீதி" (Naanku Vilakkukal Viethi – Vier-Lichter-Weg) என்று பெயரிடப்பட்டது.உயிரிழந்த நால்வரின் நினைவை நிலைநிறுத்தும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டதாக சூர் நகராட்சி தெரிவித்துள்ளது. அதே இடத்தில் நினைவுப் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் பேசிய சூர் நகரசபைத் தலைவர் ஹான்ஸ் மார்ட்டின் மெயுலி, 1989 ஆம் ஆண்டின் இந்தத் தீவைத்துத் தாக்குதலை சூர் நகரின் வரலாற்றில் மிகவும் வேதனையான நேரிடர் என்று குறிப்பிட்டார்.
அக்காலத்தில் இக்கொடுஞ்செயல் இனவெறி அல்லது வலதுசாரி தீவிரவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போதுமான அளவில் உசாவப்படவில்லை என்றும் அதனால் பல கேள்விகள் பதிலின்றி போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் தமிழச் சமூகமும் மேலும் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

