இலங்கையில் தற்போது அதிகமான டெங்கு நோயாளர்களும், மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், மேல் மாகாணத்தின் நிலைமை தீவிரமடைந்து மருத்துவமனைகளின் கொள்ளளவும் மிஞ்சியுள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான 6 முக்கிய முன்மொழிவுகள் அடங்கிய திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மு…
இலங்கையில் தற்போது அதிகமான டெங்கு நோயாளர்களும், மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், மேல் மாகாணத்தின் நிலைமை தீவிரமடைந்து மருத்துவமனைகளின் கொள்ளளவும் மிஞ்சியுள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான 6 முக்கிய முன்மொழிவுகள் அடங்கிய திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ளார்.
டெங்கு அச்சுறுத்தல் மற்றும் களநிலவரப் பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் நேற்று (04.07.2026) நடத்திய விசேட கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட 6 முக்கிய முன்மொழிவுகள் வருமாறு:-1. பூச்சியியல் அதிகாரிகளின் வசதிகளை மேம்படுத்தல் பூச்சியியல் துறைக்குத் தேவையான வசதிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும். இந்த உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்குப் பணிப்பாளர் அனுமதி அளித்த போதிலும், பிரதிப் பணிப்பாளர் நாயகம் அதனை நிராகரித்துள்ளார். பிரதிப் பணிப்பாளர் நாயகத்தை விடவும், களத்தில் நின்று பணியாற்றும் இந்த உத்தியோகத்தர்களுக்கே போக்குவரத்து வசதிகள் மிக அவசியமானவை என்பதால், அவர்களுக்கு உடனடியாக வாகன வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.2. சட்ட ரீதியான அதிகாரங்களை வழங்குதல் பூச்சியியல் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் செய்யும்போது தற்போதைய சட்ட ரீதியான ஆதரவு குறைவாக உள்ளதால், களப் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே, அவர்களுக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கும் வகையில், 2007 ஆம் ஆண்டின் கொசுவினால் பரவும் நோய்த்தடுப்புச் சட்டத்தை தற்போதைய 2026 ஆம் ஆண்டின் தேவைகளுக்குப் பொருத்தமானதாகத் திருத்தம் செய்ய வேண்டும். அத்துடன், கொள்கை உருவாக்கத்திலும் இவர்களின் தரவுகளையும் ஆலோசனைகளையும் பயன்படுத்த வேண்டும்.3. அரசியல் தலையீடுகளை தவிர்த்தல் டெங்கு ஒழிப்புப் பணிகளை முன்னெடுக்கும் போது மேல்மட்டத்திலிருந்து வரும் அரசியல் தலையீடுகள் முற்றாகக் குறைக்கப்பட வேண்டும். தரவுகள் மற்றும் விஞ்ஞானபூர்வமான விடயங்களின் அடிப்படையில், அதிகாரிகள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.4. உண்மை நிலைமைகளை கண்டறிந்து கலந்துரையாடல் அனுராதபுரம், குருநாகல், மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. சமய வழிபாட்டுத் திருவிழாக் காலங்களை முன்னிட்டு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்றை அதிகாரிகள் முன்மொழிந்த போதிலும், சுகாதாரத் துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அதனையும் நிராகரித்துள்ளார். எனவே, பொறுப்பான சுகாதார அமைச்சர் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு, அற்பக் காரணங்களைக் கூறாமல் இந்த உத்தியோகத்தர்களுடன் நேரில் கலந்துரையாடித் தீர்வுகளை எட்ட வேண்டும்.5. இராஜதந்திர ரீதியிலான தொழில்நுட்ப ஆதரவு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்க்கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் டெங்கு நோய் பரவலை முற்றாக ஒழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான 'வொல்பாக்கியா' போன்ற தொழில்நுட்ப வழிமுறைகளை இலங்கையிலும் பின்பற்ற வேண்டும். இதற்காக முறையான நிதியை ஒதுக்கி, அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதற்கான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுத்தர நாம் ஒத்துழைப்போம்.6. பூச்சியியல் துறை வெற்றிடங்களை நிரப்புதல் கடந்த 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, நாட்டுக்குச் சேவையாற்றி வரும் பூச்சியியல் துறையில் 346 உத்தியோகத்தர்கள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது 192 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். களப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமாயின் நிலவும் இந்தப் பெரும் பணியாளர் வெற்றிடங்களை அரசு விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

