இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் டெங்குத் தொற்றுக்கு புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் திரிபு (strain) காரணமெனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோர் தெரிவித்த கருத்துக்களைச் சுகாதார நிபுணர்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இ…
இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் டெங்குத் தொற்றுக்கு புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் திரிபு (strain) காரணமெனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோர் தெரிவித்த கருத்துக்களைச் சுகாதார நிபுணர்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
இவ்வாறான கருத்துக்களை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்துத் கருத்துத் தெரிவித்த சிறுவர் நோய் குறித்த ஆலோசகர் வைத்தியர் லக் குமார் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள எந்தவொரு ஆய்வகமும் புதிய டெங்கு வைரஸ் திரிபைக் கண்டறியவில்லை என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
அண்மைய தொற்று அதிகரிப்புக்கு ஏதேனும் புதிய வைரஸ் திரிபு காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்த அவர், இவ்வாறான கூற்றுகளை எவராலும் நிரூபிக்க முடியவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மூத்த ஆலோசகர் வைத்தியர் உதித விஜேவிக்ரமவும் புதிய திரிபு பரவுவதாகக் கூறப்படும் பரிந்துரைகளை நிராகரித்துள்ளார்.
டெங்கு வைரஸ் செரோடைப் 2 (DENV-2) தற்போது ஆதிக்கம் செலுத்துவதே இந்தத் தொற்று அதிகரிப்புக்குக் காரணம் என்று அவர் விளக்கியுள்ளார்.
டெங்குப் பரவலானது பல்வேறு செரோடைப்களின் சுழற்சியால் பாதிக்கப்படுவதாகவும், அண்மைய மாதங்களில் முன்னர் ஆதிக்கம் செலுத்திய டைப் 3 வைரஸை இடமாற்றம் செய்து டைப் 2 வைரஸ் அதிகளவில் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல மக்களிடம் டைப் 2 வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம் என்பதால், இந்தச் செரோடைப் மாற்றம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோர் முறையே புதிய வைரஸ் திரிபு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் திரிபு ஆகியவை டெங்குப் பரவலுக்குக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், சுகாதார நிபுணர்கள் இந்த விளக்கங்களை அளித்துள்ளனர்.
வைரஸ் செரோடைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டாலும், புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட டெங்கு வைரஸ் திரிபு இலங்கையில் இருப்பதற்கு எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லை என்பதைச் சுகாதார நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

