(நா.தனுஜா) வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்கள…

(நா.தனுஜா) வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் என்பவற்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்pன் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸ{க்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்புக்கு தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் வெள்வேறு காரணங்களினால் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை லோரா போஃபில்ஸ{டன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கும் பங்கேற்றிருந்தார். இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் குறித்தும் மிக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியம், நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்தவேண்டியதன் அவசியம், மனித உரிகைளைப் பாதுகாத்தல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தல், ஜனநாயக மற்றும் சட்டவாட்சி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதேபோன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அவர்களுக்கான சமத்துவம், அடிப்படை உரிமைகள், கண்ணியம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்து தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அத்தோடு இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதியானதும், கண்ணியமானதும், நிலையானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அரசியல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் அவர்கள் பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்தனர். அதேவேளை ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல், அரசியல் பொறுப்புணர்வை மேம்படுத்தல், நல்லாட்சியை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார மீட்சிக்கு சமாந்தரமான அரசியல் முன்னேற்றம் என்பன நாட்டின் எதிர்கால நலனுக்கு இன்றியமையாதவையாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் நிலையான அரசியல் தீர்வை என்பவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு பிரித்தானியா வழங்கிவரும் ஆதரவுக்கு தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் தமது நன்றியை வெளிப்படுத்தினார்.