தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற எவருமே தங்கத் தாம்பாளத் தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைத் தரமாட்டார்கள் என்றும், எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சூழலை நாமே உருவாக்க வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக…
தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற எவருமே தங்கத் தாம்பாளத் தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைத் தரமாட்டார்கள் என்றும், எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சூழலை நாமே உருவாக்க வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈ.பி.டி.பி. முன்வைத்த மாற்று அரசியல் கொள்கைகளே நடைமுறைச் சாத்தியமானது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுப்படுத்தி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு மட்டுமே இந்திய அரசாங்கத்தின் அனுசரணையும் இருக்கும்.
ஆனால் தற்போது, சிலர் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து சர்வதேச விசாரணை, சமஷ்டி என்று கூறி சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான வெற்று முழக்கங்கள் எமது மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தராது. மாகாண சபை முறையில் இருந்து ஆரம்பித்து, ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற இலக்கினை நோக்கிப் பயணிப்பதே எமது இறுதி நோக்கம் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
இதனைப் பல ஏமாற்றங்களுக்குப் பிறகு தற்போது அனைத்துத் தமிழ்த் தரப்பினரும் உணர்ந்து வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறான உண்மைகளும், எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் வேலைத்திட்டங்களும் சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படாததே எமது அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
எனவே, எமது அரசியல் கொள்கைகளைச் சாத்தியமான அனைத்து வழிமுறைகள் ஊடாகவும் மக்கள் மத்தியில் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

