நிதர்ஷன் வினோத் இலங்கையின் வடக்கு, கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் வாழும் ஈழத்தமிழர் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான ‘தமிழ்த் தேசியப் பேரவை’, இன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச்…

நிதர்ஷன் வினோத்

இலங்கையின் வடக்கு, கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் வாழும் ஈழத்தமிழர் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான ‘தமிழ்த் தேசியப் பேரவை’, இன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டது. இதன்போது, எமது கோரிக்கைகளை உள்ளடக்கிய எழுத்துமூலமான கடிதமொன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, பின்வரும் விடயங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டன:

ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு, தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம்.

ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம்.

இந்திய மற்றும் ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காணும் நடவடிக்கைகள்.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்.

குறித்த சந்திப்பில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழு கலந்துகொண்டது. அக்குழுவில் இடம்பெற்றவர்கள்:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – தலைவர், தமிழ்த் தேசியப் பேரவை; நாடாளுமன்ற உறுப்பினர்.

செல்வராசா கஜேந்திரன் – பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

பொன்னுத்துரை ஐங்கரநேசன் – தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.

கே. வி. தவராசா – தலைவர், ஜனநாயகத் தமிழர் கட்சி; ஜனாதிபதி சட்டத்தரணி.

தருமலிங்கம் சுரேஷ் – தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

கனகரட்ணம் சுகாஷ் – உத்தியோகபூர்வ பேச்சாளர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி.

நடராஜர் காண்டீபன் – கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி.