தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பாடத்திட்ட அபிவிருத்தி நிலையம் மற்றும் தர உறுதிப்பாட்டுப் பிரிவு திறந்து வைப்பு "பாடத்திட்ட அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிகளைப் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடிய புதிய அணுகுமுறைக்கு அமைவாக முன்னெடுக்க முடியும்"…

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பாடத்திட்ட அபிவிருத்தி நிலையம் மற்றும் தர உறுதிப்பாட்டுப் பிரிவு திறந்து வைப்பு "பாடத்திட்ட அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிகளைப் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடிய புதிய அணுகுமுறைக்கு அமைவாக முன்னெடுக்க முடியும்" கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தேசிய கல்வி நிறுவனத்திற்குள் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்ட அபிவிருத்தி நிலையத்தினால், நிறுவனத்தின் பணிகளைப் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடிய புதிய அணுகுமுறைக்கு அமைவாக முன்னெடுக்க முடியும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பாடத்திட்ட அபிவிருத்தி மையம் (Curriculum Development Centre) மற்றும் புதிய தர உறுதிப்பாட்டு அலகு (Quality Assurance Unit) ஆகியவற்றின் திறப்பு விழா, நேற்று (2026 ஜூலை 02) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த புதிய பாடத்திட்ட அபிவிருத்தி மையத்தின் ஊடாக, பாடசாலை பாடத்திட்டங்களை மிகவும் துல்லியமாகவும் நம்பகமான முறையிலும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய, பாடத்திட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தரப்படுத்தப்பட்ட செயற்பாட்டு நடைமுறைக்கு அமைவாக, கல்விசார், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இந்த மையத்தில் மதிப்பீடு செய்யப்படும். இப்பணிகளை மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக, முழு தேசிய கல்வி நிறுவனத்தின் நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட புதிய தர உறுதிப்பாட்டு அலகும் இதனுடன் திறந்து வைக்கப்பட்டது. பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன புதிய பாடத்திட்ட அபிவிருத்தி மையத்தைத் திறந்து வைத்ததுடன், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ. ஜி. தயாரத்னவுடன் இணைந்து மையத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்தார். நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதி அமைச்சர்: "முன்பிள்ளைப்பருவம், பொதுக் கல்வி, தொழில் மற்றும் உயர் கல்வி ஆகிய அனைத்து கல்வித் துறைகளிலும் அடிப்படைக் கொள்கைகளை வகுக்கும் இறுதிக்கட்டத்திலேயே நாம் இருக்கின்றோம். மேலும், கல்வியின் தரத்தை நாம் எதிர்பார்க்கும் மட்டத்திற்கு உயர்த்துவதற்குத் தேவையான மனித மூலதனத்தின் அளவை, துல்லியமான புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையில் தற்போது கணித்து வருகிறோம். அரசாங்கத்தின் கல்விக் கொள்கையின் ஒட்டுமொத்த நோக்கத்தை உள்ளடக்கும் வகையில், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். பொதுக் கல்வியின் பெரும்பகுதியை உள்ளடக்கும் நிறுவனம் என்ற வகையில், தேசிய கல்வி நிறுவனத்தின் பங்களிப்பு எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறானதொரு நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில், தகவல்கள் பரிமாறப்படும் விதம் மற்றும் கல்விச் செயற்பாடுகளின் பொறுப்புக்கூறல் குறித்து கடுமையாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேபோல், அந்தப் பணிகளை ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கு அமைவாக, முறையான தர உறுதிப்பாட்டு பொறிமுறையின் ஊடாக முன்னெடுப்பது அவசியமாகும். இன்று எடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நடவடிக்கை, தேசிய கல்வி நிறுவனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய மைல்கல்லாகும். இந்நிறுவனத்தில் இருக்கின்ற கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் நாட்டின் ஒரு தேசிய செயன்முறைக்கே பங்களிப்புச் செய்கின்றனர். அந்தத் தேசியப் பணிக்கு பங்களிப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி, உங்கள் தொழில் வாழ்க்கையில் மிக முக்கியமான நினைவாக அமையும்" என தெரிவித்தார். தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ. ஜி. தயாரத்ன உரையாற்றுகையில், தேசிய கல்வி நிறுவனம் என்ற வகையில் நமது நாட்டிற்கும் பிள்ளைகளுக்கும் சிறந்தவற்றை வழங்குவதற்கே எப்போதும் முயற்சிப்பதாகத் தெரிவித்ததோடு, இச்செயன்முறையை வெளிப்படைத்தன்மையுடனும் மிகவும் கவனமாகவும் முன்னெடுப்பதாகவும், 2027 ஆம் ஆண்டில் ஆறாம் தரத்திற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களைத் தொடங்குவதற்கான Modules மற்றும் ஆசிரியர் வழிகாட்டல்களை குறித்த நேரத்தில் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கே. ரஞ்சித் பத்மசிறி, கல்விசார் விவகாரங்கள் சபையின் தலைவி பேராசிரியர் பிரியங்கனி சேனநாயக்க, பிரதிப் பணிப்பாளர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா பணியாளர்கள் கலந்துகொண்டனர்.